Saturday, September 28, 2013

நமக்குத்தெரிந்த ஸ்லோகங்களுக்குப்பொருள் தெரிந்து கொள்வோம்!


நாம் தினந்தோறும் சொல்லும் ஸ்லோகங்கள் பலவற்றுக்கும் பெரும்பாலானவர்களுக்குப் பொருள் தெரிவதில்லை. இந்த ஸ்லோகங்களில் பக்தி வெளிப்படுவது உண்மை தான். அதையும் தாண்டி இலக்கிய அழகு வெளிப்படுகிறதே, அதையும் நாம் ஏன் சுவைத்து மகிழக்கூடாது?

என் சம்ஸ்க்ருத அறிவு சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. ஆனாலும் , தெரிந்ததைப் பிறருக்குச்சொல்ல வேண்டும் என்ற ஆசையால் இந்த முயற்சியைத் துவங்கி உள்ளேன்.

மிகவும் பிரபலமாக இருக்கும் ஸ்லோகங்களுக்கு முதலில் பொருள் கூறுகிறேன். அப்படியே தேவையான அளவு இலக்கண விளக்கங்களும் கொடுக்கிறேன்.

இந்த முயற்சி உங்களுக்குப்பிடித்திருந்தால், தெரியப்படுத்தவும். நான் எழுதுவதில் தவறுகள் இருந்தால், திருத்தவும்.

முதலில் பிள்ளையார் ஸ்துதி.

अगजानन पद्मार्कं  गजाननं अहर्निशं |
अनेकदं  तं भक्तानां एकदन्तं उपास्महे||

இதைப்பதம் பிரித்து எழுதினால் தான் விளங்கும்.

अग जा आनन पद्म अर्कं   गज आननं अहः निशम् |
अनेक दं  तं भक्तानां एकदन्तं उपास्महे||



अग - மலை. जा - மகள். आनन -முகம். पद्म- தாமரை. अर्कं - சூரியன். गज - யானை
आननं -முகத்தை உடையவனை. अहः -பகலிலும் निशम्- இரவிலும் . अनेक - பலவற்றை दं -கொடுப்பவனை तं - அவனை भक्तानां - பக்தர்களுக்கு एकदन्तं - ஒற்றைக்கொம்பு உடையவனை उपास्महे - நான் வணங்குகிறேன்|


மலையரசனின் மகளாகிய பார்வதியின் முகமாகிய தாமரையை மலரச்செய்யும் சூரியனை, யானை முகம் கொண்டவனை,  பக்தர்களுக்குப் பலவற்றைக்கொடுக்கும் அவனை, ஒற்றைக்கொம்பு உடையவனை,  நான் பகலிலும், இரவிலும் வணங்குகிறேன்.

இந்த ஸ்லோகத்தில் अगजानन/गजानन, अनेकदंतं/एकदन्तं என்ற சொற்கள் எதிர்ச்சொற்கள் போல் உபயோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், சொற்களைப்பிரித்துப் பொருள் கொள்ளும் போது அற்புதமான பொருள் விரிகிறது.

இங்கு ஸ்லோகம் முழுவதும் இரண்டாம் வேற்றுமை உருபு உபயோகப்பட்டுள்ளது.