Monday, July 22, 2013

யோசிக்காமல் எந்தக்காரியமும் செய்யாதே!




ஒரு சிறிய ஸ்லோகத்தைச்சுற்றி எழுதப்பட்ட சுவையான கதை இது. இதில் எவ்வளவு சதவீதம் உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், பாரவி(Bharavi) என்ற பெயரில் ஒரு மகாகவி இருந்ததும் அவர் எழுதிய 'கிராதார்ஜுனீயம்' (Kiraathaarjuneeyam) என்ற நூல் சம்ஸ்க்ருத இலக்கியத்தில் தனக்கிணையில்லாத ஒரு இடம் பெற்றிருந்ததும் உண்மை.

கோதாவரி நதிக்கரையில் மஹாதேவ் என்ற பெயருடைய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மூத்த மகனான பாரவி சிறு வயது முதற்கொண்டே மிகச்சிறந்த நினைவாற்றலும், கவிதை புனையும் திறமையும் பெற்று விளங்கினான். அவனுடைய ஊர் மக்கள் மட்டுமல்லாது அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் அவனுடைய திறமைகளை வியந்து போற்றினர்.

ஆனால் ஒரே ஒருவர் மட்டும் அவனுடைய திறமைகளை சற்றும் மதிக்கவில்லை. அவர் வேறு யாரும் அல்ல. அவனுடைய தந்தை தான். மற்றவர் புகழ்வதைக்கேட்டு அவன் மிகவும் மகிழ்ச்சி அடையும் போது, 'இது என்ன பெரிய விஷயம்! சிறு பிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது!' என்பார்.

பாரவிக்கு இதில் மிகவும் வருத்தம். அவனும் பொறுத்துப்பொறுத்துப்பார்த்தான். அவனுடைய தந்தையின் அபிப்பிராயம் மாறவேயில்லை. ஒவ்வொரு முறையும் தன் தந்தையிடம் அவமானப்படும் போதும் அவனுக்குக்கோபம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஒரு நாள், 'இனி பொறுக்க முடியாது,அவரை அடித்தே கொன்று விடலாம்' என்று எண்ணிக்கொண்டு ஒரு பெரிய தடியை எடுத்துக்கொண்டு தன் வீட்டின் கதவைத்திறக்க முயன்றான். அப்போது அவனுடைய தாய் அவனைப்பற்றி அவனுடைய தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது. 'ஏன் எப்பொழுது பார்த்தாலும் பாரவியைக்கடிந்து கொண்டே இருக்கிறீர்கள்? அவனுக்கு அதில் எவ்வளவு வருத்தம் தெரியுமா? பாவம், குழந்தை! எவ்வளவு பேர் புகழ்ந்தாலும் நீங்கள் ஒரு நல்ல வார்த்தை சொன்னால் தான் அவனுக்கு திருப்தி உண்டாகும்' என்றாள்.

அதற்கு அவர், ' அசடே! உனக்கு இது புரியவில்லையா? அவனுடைய திறமைகளைப்பற்றி நானும் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால் எல்லாரும் புகழ்ந்து கொண்டே இருந்தால் அவனுக்கு கர்வம் வந்து விடும். கர்வம் வந்து விட்டால் அதன் பின் முன்னேற்றம் இருக்காது; மாறாக, அழிவும் தொடங்கி விடும். அவன் இன்னும் நிறைய முன்னேறுவான். அவனுடைய எதிர்காலம் மிகவும் நன்றாக இருக்கும். உலகம் போற்றும் கவிஞனாக அவன் விளங்கும் நாளுக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்' என்றார்.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த பாரவியின் உடல் நடுங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. உள்ளே ஓடிச்சென்று தன் தகப்பனாரின் காலில் விழுந்தான்.'தந்தையே!  நான் மகா பாவி. உங்களுடைய நல்லெண்ணத்தைப்புரிந்து கொள்ள முடியாத முட்டாள். நான் இப்போது உங்களைக்கொல்வதற்காகத் தடியை எடுத்துக்கொண்டு வந்தேன். நீங்களிருவரும் பேசியதைக் கேட்காமல் இருந்திருந்தால் இத்தனை நேரம் உங்களைக் கொன்றிருப்பேன். எனக்குத்தக்க தண்டனை கொடுங்கள்' என்று மன்றாடினான்.

மகாதேவ் அவனை எழுப்பினார். 'எழுந்திரு குழந்தாய்! இது உன் தவறு மட்டும் அல்ல.நானும் கொஞ்சம் அதிகமாகத்தான் உன்னை அவமதித்திருக்கிறேன். போகட்டும். விடு. நீ உன் தவறை ஒப்புக்கொண்டு விட்டாய். அதுவே போதும். இனி உனக்கு தண்டனை வேண்டாம்' என்றார்.

ஆனால் பாரவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 'எனக்கு நீங்கள் தண்டனை கொடுக்கவில்லை என்றால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது.தயவு செய்து இரக்கம் காட்டாதீர்கள். நான் என்ன செய்யவேண்டும், சொல்லுங்கள்' என்றான்.

சிறிது யோசித்துவிட்டு மகாதேவ் சொன்னார், 'நீ சொல்வதும் சரி தான். தண்டனை தான் உன்னைத்தூய்மைப்படுத்தும். நீயும் உன் மனைவியும் உடனே உன் மாமனாரின் வீட்டுக்குச்செல்லுங்கள். நானாக உன்னை அழைக்கும் வரை என்ன நடந்தாலும் நீ அங்கேயே தான் இருக்க வேண்டும்'.

பாரவிக்கோ ஆச்சரியம். 'மாமனாரின் வீட்டில் சுகமான வாழ்வு தானே! அன்பும் மதிப்பும் நிறைய கிடைக்குமே! இது எப்படி தண்டனையாகும்?' என்று நினைத்தான். ஆயினும் அப்பாவிடம் மேலும் வாதிட விரும்பாமல் உடனே தன் மனைவி ஜானகியை  அழைத்துக்கொண்டு எந்தப்பொருளையும் எடுத்துக்கொள்ளாமல் உடுத்த துணியுடன் தன் மாமனாரின் வீட்டுக்குச்சென்றான்.

பாரவியின் மாமனாரும்  கல்வி கேள்விகளில் சிறந்தவர். அவருக்கு இந்த மகள் மட்டுமன்றி இன்னும் இரண்டு மகன்களும் இருந்தார்கள். எல்லாரும் கூட்டுக்குடும்பமாக வசித்தார்கள். கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் வந்த வருமானத்தில் அனைவரும் ஓரளவு வசதியுடன் வாழ்ந்து வந்தார்கள்.

பாரவியையும் அவனுடைய மனைவி ஜானகியையும் அவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். நடந்ததை பாரவி விவரித்து விட்டு இனி தன் தந்தையார் தன்னை அழைக்கும் வரை அங்கே தான் இருக்கப்போவதாகத்தெரிவித்தான். இதைக் கேட்ட உடனேயே அவர்களுடைய முகம் மாறிவிட்டது. 'சரி, சரி' உள்ளே போங்கள்' என்றார்கள். பாரவியும் அவனுடைய மனைவியுமே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி வந்தது. உணவு உண்பதற்குக்கூட அவர்களை யாரும் அழைக்கவில்லை. பசித்தால் அவர்களே போய்ச்சாப்பிட வேண்டிய நிலை. நல்ல நாள், பண்டிகை என்றால், எல்லாரும் சிரித்து மகிழ்வர். ஆனால், இவர்கள் இருவரையும் எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். எல்லாருக்கும் புதுத்துணி எடுத்தாலும் இவர்கள் இருவருக்கும் பழைய துணிகள் தாம்.'நாளாக நாளாக, அங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நரகமாக இருந்தது.

இத்தனைக்கும் இடையில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பாரவியின் கவிதைத்திறன் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஜானகி அவனிடம் வந்தாள். 'என் தோழி ஒருத்தி மிகவும் வசதியாக இருக்கிறாள். அவளுக்கு கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு ஒரு நல்ல கவிதை எழுதிக்கொடுங்கள். அவள் நல்ல சன்மானம் கொடுப்பாள். நாம் பணம் கொடுத்தால் நம் நிலைமை கொஞ்சம் சீரடையும்' என்றாள்.

'அப்படியா? யார் அது? நீ இது வரை அவளைப்பற்றி சொன்னதேயில்லையே!'

'அவளை சமீபத்தில் தான் மீண்டும் பார்த்தேன். அவளுடையது ஒரு விசித்திரமான கதை. அவளுடைய கணவர் அவள் மகனுக்கு ஏழு வயது இருக்கும் போது வெளியூரில் போய் வியாபாரம் செய்து சம்பாதித்துக்கொண்டு வருகிறேன் என்று போனவர் வருடக்கணக்காக வரவேயில்லை. அவரைத்தேட என் தோழி எவ்வளவோ முயற்சிகள் செய்தும் ஒன்றும் பயன் இல்லை. இறுதியில் தன் குடும்பத்தொழிலை இவளே எடுத்து நடத்தத் தொடங்கினாள். கடவுள் அருளால் நல்ல முன்னேற்றம். இப்போது அவள் மிகவும் வசதியாக இருக்கிறாள். வீட்டை மாற்றிப்பெரியதாகக்கட்டி விட்டாள். அவளுடைய மகனும் நன்றாக வளர்ந்து அவளுக்கு உதவியாக இருக்கிறான். அவள் நிறைய தான தருமங்கள் செய்கிறாள். என்றாவது ஒரு நாள் தன் கணவன் திரும்பி வருவான் என்று நிச்சயமாக நம்பிக் கொண்டிருக்கிறாள்' என்றாள்.

சரி, என்று பாரவி உடனே ஒரு ஸ்லோகம் எழுதி ஜானகிக்குக்கொடுத்தான் 'இந்த ஸ்லோகம் நான் இனி எழுதப்போகும் என்னுடைய காவியத்தில் இடம் பெறும். இப்போது இதைக்கொண்டு போய்க்கொடு. முதன்முதலில் இதைப்பார்க்கப்போவது உன் தோழி தான்' என்றான். அவளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் தோழியிடம் சென்று அதைக்காட்டினாள். அதைப்படித்த அவளுடைய தோழி மிகவும் மகிழ்ந்து நிறைய பரிசுகளும் துணிமணிகளும் ஜானகிக்குக் கொடுத்து அனுப்பினாள்.

அது மட்டும் அன்றி இந்த ஸ்லோகத்தை ஒரு நல்ல பட்டுத்துணியில் அழகாக எழுதித் தன் அறைக்கு வெளியே முன் அறையின் சுவற்றில் மாட்டச்செய்தாள்.

இதன் இடையே அவளுடைய கணவனும் தன் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தான். பதினோரு வருடங்கள் கழித்துத் தன் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான். எண்ணற்ற நகைகளும், பட்டுத்துணிகளும் மற்றும் பல் விலையுயர்ந்த பொருட்களும் அவனுக்குப்பின்னே மாட்டு வண்டிகளில் வந்தன.

அன்று சித்திரை மாதத்து பௌர்ணமி நாள். வானில் முழு நிலவு ஒளி வீசிக்கொண்டிருந்தது. தன் வண்டிகளை நகரத்துக்கு வெளியே நிறுத்தி வைத்து விட்டுத் தான் மட்டும் குதிரை மீது ஏறிக்கொண்டு தனக்கு நன்கு பழக்கப்பட்ட வீதிகளில் மிகுந்த ஆவலுடன் பயணித்துக்கொண்டு வந்தான். அவன் வீடு இருந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய மாளிகை இருந்தது. அவனுக்கு ஒரே யோசனையாகப்போயிற்று. மெதுவாகக்குதிரையை விட்டு இறங்கித் தயக்கத்துடன் வீட்டுக்கதவைத்தட்டினான். சிறிது நேரத்தில் அவனுக்குப் பழக்கப்பட்ட ஒரு வேலையாள் கதவைத்திறந்தான். அவன் ஆச்சரியத்தில் கூக்குரல் இடுவதற்கு முன் அவனைத்தடுத்து அமைதியாக இருக்கச்சொல்லி விட்டு மெதுவாகப்படுக்கை அறைப்பக்கம் சென்றான். ஜன்னல் கதவுகள் திறந்து இருந்தன. குளிர்ந்தகாற்று வீசிக்கொண்டிருந்தது. அவனுடைய மனைவி முன்பிருந்ததை விட அழகாக ஆகியிருந்தாள். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். அவளருகே ஒரு அழகான வாலிபனும் உறங்கிக்கொண்டிருந்தான்.

கோபம் கொப்பளிக்க அவன் வாளை உருவிக்கொண்டு அந்த வாலிபனைக்கொல்வதற்காகப் படுக்கை அறை வாயிலை நோக்கி நடந்தான். தற்செயலாக அவன் பார்வை அங்கே தொங்கிக் கொண்டிருந்த பட்டுத்துணி மீது பட்டது. அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் அழகும், ஆழ்ந்த பொருளும் அவனைக்கட்டிப்போட்டன. ஆர்வத்துடன் அதைப்படித்தான்.


'सहसा विदधीत न क्रियाम्
अविवेकाः परमापदाम् पदम।
व्रुणुते हि विम्रुश्य कारिणम्
गुणलुब्धाः स्वयमेव सम्पदाः॥'

பொறுமையை உபதேசிக்கும் இந்த ஸ்லோகத்தின் பொருள்:


'அவசரப்பட்டுக் காரியத்தில் இறங்காதே.
ஆத்திரம் நிறந்த மனம் ஆபத்துக்களின் இருப்பிடம்.
யோசித்து செயல் செய்பவன் எப்போதும் செழிப்புடன் இருப்பான்.'

மிகச்சுருக்கமாகக்கூறப்பட்டிருந்த இந்த சொற்களின் பொருள் அவன் உள்ளத்தை ஊடுருவியது. கொஞ்சம் நிதானித்து, உருவிய வாளுடனேயே கதவைத்தட்டினான்.கதவைத்திறந்த அவன் மனைவி மகிழ்ச்சியில் கூவினாள். அடுத்த நிமிடம் தன் கணவனின் கண்களில் இருந்த சந்தேகத்தையும் கோபத்தையும் உணர்ந்தாள்.உடனே தூங்கிக்கொண்டிருந்த மகனை எழுப்பி, 'மகனே! இங்கே பார். உன் தந்தை வந்திருக்கிறார்' என்றாள்.தன் மனைவிக்கு அருகில் படுத்துறங்கிய வாலிபன் தன் மகன் தான் என்று அறிந்தவுடன் அவள் கணவன் மிக்க மகிழ்ச்சியுடன் அவனைக்கட்டித்தழுவினான். அந்த ஸ்லோகத்தை மட்டும் படிக்காமல் இருந்திருந்தால் இத்தனை நேரம் என்ன நடந்திருக்கும் என்று எண்ணவே அவன் உள்ளம் நடுங்கியது.

மறு நாள் மிகுந்த மரியாதையுடன் பாரவியையும் அவனது மனைவியையும் தன் வீட்டுக்கு அழைத்து அவர்கள் இருவருக்கும் நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினான். பாரவியின் புகழ் பரவத்தொடங்கியது.

அவனுடைய தந்தையார் காதிலும் இது எட்டியது. மிகுந்த மகிழ்வுடன் அவர் பாரவியையும் அவன் குடும்பத்தையும் திரும்ப அழைத்துக்கொண்டார். பாரவி மேலும் மேலும் நல்ல கவிதைகளையும் காவியங்களையும் படைத்தான். அவன் எழுதிய 'கிராதார்ஜுனீயம்' என்ற காவியம் அவனுடைய எழுத்துக்களுக்கு சிகரமாக அமைந்தது.



Monday, July 15, 2013

அக்பரின் லோட்டா

(பல ஆண்டுகளுக்கு முன் ஹிந்தியில் படித்த 'அக்பரீ லோட்டா'  (Akbari Lota) என்ற கதை எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று. நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் எல்லோரும் புத்திசாலிகளும் அல்ல. அடிமையாக இருந்த இந்தியர்கள் எல்லோரும் முட்டாள்களும் அல்ல என்பது இந்தக்கதையின் அடி நாதம். இதை நான் வரிக்கு வரி மொழி பெயர்க்கவில்லை. இதை எழுதியவர் அன்னபூர்ணானந்த் வர்மா (1895 -1962) என்னும் ஹிந்தி எழுத்தாளர். இந்தக்கதை நடந்த காலம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன். அதை நினைவில் வைத்துக்கொண்டு கதையைப்படிக்கவும்.)

அக்பரின் லோட்டா

லாலா ஜாவூலாலின் வீடு காசியில் உள்ள ஒரு கடைவீதியில் இருந்தது. மாடியில் அவர் குடியிருந்தார். கீழே நிறைய கடைகளைக்கட்டிப்போட்டிருந்தார். மாதம் 100 ரூபாய் வாடகை வந்தது. திருமணம் ஆகியிருந்தது. இன்னும் குழந்தைகள் ஆகவில்லை. செலவு அதிகம் இல்லை. நன்றாக சாப்பிட்டு நல்ல துணிமணிகள் உடுத்தி சுகமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், திடீரென்று ஒரு நாள் அவருடைய மனைவி 250 ரூபாய் வேண்டும் என்று கேட்ட போது ஜாவூலால் தடுமாறித்தான் போய் விட்டார். அவருடைய தடுமாற்றத்தைப் பார்த்த அவருடைய மனைவி சொன்னாள், "கவலைப்படாதீர்கள். நான் என்னுடைய அண்ணாவிடம் வாங்கிக்கொள்கிறேன்."

இதைக்கேட்டு ஜாவூலாலுக்கு சரியான கோபம் வந்தது. 250 ரூபாய்க்காக உன் அண்ணனிடம் பிச்சை கேட்பாயா? நானே கொடுக்கிறேன்."

"எனக்கு இந்த ஜன்மத்திலேயே வேண்டும்"

"ஒரே வாரத்தில் வாங்கிக்கொள்"

"ஒரு வாரம் என்றால் 7 நாட்களா? 7வருஷங்களா?"

இதற்கு மேல் கிண்டல் பொறுக்க முடியாத ஜாவூலால் சொன்னார், "இன்றிலிருந்து எண்ணி ஏழே நாட்களில் உனக்கு பணம் கொடுக்காவிட்டால் என் பெயர் ஜாவூலால் இல்லை."

"ஆண்பிள்ளையின் சபதமா?"

ஆமாம். ஆண்பிள்ளையின் சபதம் தான்".

நான்கு நாட்கள் விளையாட்டு போல் கழிந்து விட்டன. பணத்துக்கான ஒரு ஏற்பாடும் செய்ய முடியவில்லை. ஜாவூலாலுக்குக் கவலை பற்றிக்கொண்டுவிட்டது. ஒரு வேளை பணம் கொடுக்க முடியவில்லை என்றால்? இருந்திருந்து இப்போது தான் முதன்முறையாக அவருடைய மனைவி பணம் கேட்டிருக்கிறாள். பணம் புரட்ட முடியவில்லை என்று அவளிடம் எப்படி சொல்வது? சொன்னால் அவள் அதன் பிறகு தம்மை மதிப்பாளா? 'ஆண்பிள்ளையின் சபதம்' என்ற வீராப்பு வேறு!

இந்தக்கவலையிலேயே இன்னும் ஒரு நாள் கழிந்தது. ஐந்தாம் நாள் பயந்து போய் தன் நண்பர் பில்வாஸீ (Bilwasi Misra) மிஸ்ராவிடம் தன் சோகக்கதையைக்கூறினார். ஆனால் அந்த சமயம் பார்த்து அவரிடமும் அவ்வளவு பணம் இல்லை. ஆனாலும் சொன்னார், "என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எப்படியாவது பணம் புரட்ட முயற்சிக்கிறேன். பணம் கிடைத்தால் நாளை மாலை உன்னை வீட்டில் வந்து சந்திக்கிறேன்".

அடுத்த நாள் மாலையும் வந்தது. “நாளை இத்தனை நேரம் பணத்தை  எண்ணி எண்ணி அவளிடம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரேயடியாக மானத்தை இழக்க வேண்டும். அவள் ஒன்றும் என்னைத்தூக்கில் போடப்போவதில்லை. சின்னதாக ஒரு சிரிப்பு சிரிப்பாள்.” அந்த சிரிப்பை நினைத்தாலே ஜாவூலாலுக்கு நெஞ்சைப்பிசைந்தது.இன்னும் பில்வாஸீ வரவில்லை. ஒரு வேளை அவர் வராவிட்டால்.....'

இந்தக்குழப்பத்திலேயே அவர் தன் வீட்டின் மொட்டை மாடியில் உலவிக்கொண்டிருந்தார். தாகம் எடுப்பது போல் இருந்தது. தண்ணீர் வேண்டும் என்று குரல் கொடுத்தார். வேலைக்காரன் இல்லை. அவருடைய மனைவியே தண்ணீர் கொண்டு வந்தாள். ஆனால் டம்ளர் கொண்டுவர மறந்து விட்டாள். ஒரு பித்தளை லோட்டாவில் கொண்டுவந்தாள். (லோட்டா என்பது தண்ணீர் குடிக்க உபயோகிக்கும் ஒரு பாத்திரம். சிறிய செம்பு போல் இருக்கும். கழுத்து குறுகியும் வயிறு அகன்றும் இருக்கும்)
அதை வாங்கி ஓரிரண்டு வருடங்கள் தான் ஆகின்றன. ஆனால் அதனுடைய விசித்திரமான உருவத்தால் அதைக்கண்டாலே ஜாவூலாலுக்குப்பிடிக்காது.

தன் கோபத்தை விழுங்கிக்கொண்டு லோட்டாவைத்தூக்கிக் குடிக்கலானார். அப்போது அவர் மொட்டை மாடியின் கைப்பிடிச்சுவரருகே நின்று கொண்டிருந்தார். எப்பொழுது அவர் கையில் இருந்து நழுவியதோ, ஒரு நொடியில் கீழே விழுந்து மறைந்தது. கீழே வரிசையாகக்கடைகள். நிறைய மனிதர்கள்.
யார் தலை மேல் விழுந்து வைத்ததோ, அவருக்கு என்ன ஆயிற்றோ என்று பயந்து நடுங்கிக்கொண்டே ஜாவூலால் அவசர அவசரமாகக் கீழே இறங்கினார். அதற்குள் அங்கே ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. அந்தக்கூட்டத்தின் நட்ட நடுவில் ஒரு ஆங்கிலேயர். அவர் தலையில் இருந்து கால் வரை தண்ணீரில் நனைந்திருந்தது. இது போதாதென்று தன் ஒரு பாதத்தைக் கையில் பிடித்துக்கொண்டு இன்னொரு பாதத்தினால் நடனம் வேறு ஆடிக்கொண்டிருந்தார்.

அந்த லோட்டா கீழே விழுவதற்கு முன் ஒரு கடையின் பெயர்ப்பலகையின் மீது இடித்து விட்டு நேரே அங்கு நின்றிருந்த ஆங்கிலேயரின் தலைமேல் அபிஷேகம் செய்துவிட்டு அவருடைய பூட்ஸின் மேல் போய் விழுந்திருந்தது.

ஜாவூலாலைப்பார்த்தவுடன் அந்த ஆங்கிலேயர் தன் மொழியில் உள்ள அத்தனை வசவுகளையும் ஒட்டு மொத்தமாக அவர் மேல் பொழிந்து தள்ளினார். அப்போது தான் ஜாவூலாலுக்கே தெரிந்தது ஆங்கிலத்தில் திட்டுவதற்கு இத்தனை வார்த்தைகள் உண்டென்று.

அதே நேரத்தில் கூட்டத்தைக்கிழித்துக்கொண்டு அவருடைய நண்பர் பில்வாஸீ மிஸ்ரா அங்கு வந்தார். முதல் காரியமாக ஒரு நாற்காலியைப்போட்டு அந்த ஆங்கிலேயரிடம் சொன்னார்," உங்கள் காலில் அடி பட்டு விட்டது போல் இருக்கிறது. நீங்கள் முதலில் இந்த நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்." அடுத்த காரியமாக அங்கு கூடியிருந்த அத்தனை பேரையும் அங்கிருந்து விரட்டினார்.

மிஸ்ராவுக்கு நன்றி தெரிவித்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்த ஆங்கிலேயர் அவரைக்கேட்டார்."உங்களுக்கு இவரைத்தெரியுமா?"

"யாரென்றே தெரியாது. இப்படி ஒரு தீங்கும் செய்யாத வழிப்போக்கர்களின் மேல் லோட்டாவினால் தாக்குபவர்களைத்தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை."

"என்னைப்பொருத்தவரை இவர் ஒரு ஆபத்தான பைத்தியக்காரர்."

"என்னைப்பொருத்தவரை இவர் ஒரு ஆபத்தான குற்றவாளி."

கடவுள் மட்டும் ஜாவூலாலின் கண்களுக்கு சாப்பிடும் சக்தியையும் கொடுத்திருந்தால் அவர் பில்வாஸியைக் கண்களாலேயே கடித்து விழுங்கியிருப்பார்.

என்ன நடக்கிறது என்றே அவருக்குப்புரியவில்லை. அவருடைய நண்பரான பில்வாஸிக்கு என்ன ஆயிற்று? அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?

அப்போது அந்த ஆங்கிலேயர் பில்வாஸியிடம் கேட்டார்,
"இப்போது என்ன செய்யலாம்?"

"ஐயா! உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் இந்த ஆளைப்பற்றி ரிபோர்ட் செய்து இவரை லாக் அப்பில் அடைக்கச்செய்யலாம்."

"போலீஸ் ஸ்டேஷன் எங்கிருக்கிறது?"

"பக்கத்தில் தான் இருக்கிறது. வாருங்கள், கூட்டிச்செல்கிறேன்."

"வாருங்கள்."

"அதற்கு முன் நீங்கள் அனுமதித்தால், இந்த ஆளிடமிருந்து இந்த லோட்டாவை வாங்கிக்கொண்டு வந்து விடுகிறேன். ஏன் ஐயா! இதை எனக்கு விற்கிறாயா?" இதற்கு நான் 50 ரூபாய் கொடுக்கத்தயாராக இருக்கிறேன்."

ஜாவூலால் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அந்த ஆங்கிலேயர் கேட்டார்," இந்த ஒன்றுக்கும் ஆகாத லோட்டாவுக்கு 50 ரூபாய் எதற்குக்கொடுக்கிறீர்கள்?"

"இதை ஒன்றுக்கும் ஆகாதது என்று கூறுகிறீர்களா? ஆச்சரியமாக இருக்கிறதே! உங்களை விஷயம் தெரிந்தவர் என்று நான் நினைத்தேனே!"

"சரி, சரி! விஷயம் என்னவென்று சொல்லுங்களேன்."

"இது வரலாற்று சிறப்பு மிக்க பொருள் என்று தெரிகிறது. உலகிலுள்ள ம்யூஸியத்து அதிகாரிகள் எல்லாம் தேடிக்கொண்டிருக்கும் ‘அக்பரீ லோட்டா’ இதுவாகத்தான் இருக்க வேண்டும்."

“என்ன சொல்லுகிறீர்கள்?”

"ஆம் ஐயா! இது 16ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சி. ஹுமாயூன் பேரரசர் ஷேர்ஷா  சூரியிடம் தோற்றுப்போய் சிந்துப்பகுதியின் பாலைவனங்களில் அலைந்து கொண்டிருந்த சமயம். ஒரு நாள் அவருக்குத்தாங்க முடியாத தாகம். எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது ஒரு அந்தணர் இந்த லோட்டாவில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து அவருடைய உயிரைக்காப்பாற்றினார். பின்னர் மீண்டும் ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். அவருடைய மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அந்தணரைத் தேடிக்கண்டுபிடித்து இந்த லோட்டாவை அவரிடம் இருந்து வாங்கிக்கொண்டார். அதற்குப்பதிலாக இதே போல் 10 தங்க லோட்டாக்களை செய்வித்து அவருக்குப்பரிசாகக் கொடுத்தார். அக்பருக்கு மிகவும் பிடித்த லோட்டா இது. இதில் தண்ணீர் எடுத்துக் கை கால் கழுவிக்கொண்டு தான் அக்பர் நமாஸ் செய்வது வழக்கம்.ஆகவே இதற்கு ‘அக்பரீ லோட்டா’ என்று பெயர் ஏற்பட்டு விட்டது. பின்னர் அரண்மனையிலேயே பல காலம் இருந்தது. எப்படியோ காணாமல் போய் விட்டது. இதனுடைய ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மாடல் தான் கல்கத்தா ம்யூஸியத்தில் இருக்கிறது. இந்த ஆளிடம் இது எப்படி வந்து சேர்ந்தது என்று தெரியவில்லை. ம்யூஸியக்காரர்களுக்குத் தெரிந்தால் ஏகப்பட்ட விலை கொடுத்து இதை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.நான் முந்திக்கொள்ள விரும்புகிறேன்."


இந்தக்கதையைக்கேட்கக்கேட்க ஆங்கிலேயரின் கண்கள் ஆச்சரியத்தினாலும், ஆசையினாலும் விரிந்து கொண்டே சென்றன.

"இதை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?"

"எனக்குப் பழைய, வரலாற்றுத்தொடர்புள்ள பொருள்களைச் சேகரிப்பதில் விருப்பம் அதிகம்."

"எனக்கும் பழைய வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை சேகரிப்பதில் விருப்பம். உண்மையில் இந்த லோட்டா என் தலையில் விழுந்த போது கூட நான் அதைத்தான் செய்து கொண்டிருந்தேன். இந்தக்கடையில் பித்தளை விக்கிரகங்கள் சிலவற்றை வாங்குவதற்காக பேசிக்கொண்டிருந்தேன்."

"இருந்தாலும் லோட்டாவை நான் தான் வாங்குவேன்."

"நீங்கள் எப்படி வாங்குவீர்கள்? நான் தான் வாங்குவேன். எனக்கு உரிமை இருக்கிறது."

“அப்படி என்ன உரிமை?”

"இந்த லோட்டாவின் தண்ணீரில் ஸ்னானம் செய்தது நானா, நீங்களா?

"நீங்கள் தான்."

"இது என் காலில் விழுந்ததா உங்கள் காலிலா?"

"உங்கள் காலில் தான்."

"என் கால் விரல் வீங்கி இருக்கிறதா, உங்களுடையதா?"

"உங்களுடையது தான்."

"அப்படியென்றால் இதை வாங்கும் உரிமையும் எனக்குத்தான்."

"இதெல்லாம் சரியில்லை. நீங்களும் விலை சொல்லுங்கள். நானும் விலை சொல்கிறேன். யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்கள் வாங்கிக்கொள்வோம்."

"அப்படியானால் சரி. நீங்கள் 50 ரூபாய் கொடுக்கிறீர்கள் என்றால் நான் 100 ரூபாய் கொடுக்கிறேன்."

"நான் 150 ரூபாய் கொடுக்கிறேன்."

"நான் 200 ரூபாய் கொடுக்கிறேன்."

"நான் 250 ரூபாய் கொடுக்கிறேன்" என்று சொல்லி பில்வாஸி 250 ரூபாய்க்கான நோட்டுக்களை ஜாவூலால் முன் எறிந்தார்.

ஆங்கிலேயருக்கு வெறி தலைக்கேறி விட்டது. "இதோ, நான் 500 ரூபாய் கொடுக்கிறேன். இப்போது என்ன சொல்கிறீர்கள்?"

பில்வாஸியின் முகம் வாடி விட்டது. "என்னால் 250 ரூபாய்க்கு மேல் கொடுக்க முடியாது. நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள்" என்று சொல்லித் தன் நோட்டுகளைப்பொறுக்கிக்கொண்டார்.
இதைக்கேட்ட ஆங்கிலேயரின் முகம் ஒரேயடியாக மலர்ந்து போயிற்று. "இனி நான் சந்தோஷமாக என் தேசத்துக்குத் திரும்பிச்செல்வேன். அந்த மேஜர் ட்க்ளஸின் பெருமையைக்கேட்டுக் கேட்டு என் காதுகள் புளித்து விட்டன.

"மேஜர் ட்க்ளஸ் யார்?"

"அவர் என்னுடைய அண்டை வீட்டுக்காரர். பழைமையான பொருட்களை வாங்கிச்சேகரிப்பதில் அவருக்கும் எனக்கும் எப்பொழுதும் போட்டி தான். சென்ற முறை இந்தியா வந்த பொழுது அவர் ஒரு 'ஜஹாங்கீரீ அண்டா' ( ஹிந்தியில் அண்டா என்றால்  முட்டை என்று பொருள்) வாங்கி வந்தார்.

"ஜஹாங்கீரீ அண்டாவா?"

ஆமாம். ‘ஜஹாங்கீரீ அண்டா’ தான். அவருக்குத்தான் இந்தியாவில் இருந்து இப்படிப்பட்ட பொருட்களை வாங்கி வர முடியும் என்ற நினைப்பு."

"அது சரி. ‘ஜஹாங்கீரீ அண்டா’ என்பது என்ன?

"அதுவா? உங்களுக்குத்தெரிந்திருக்கும், ஜஹாங்கீருக்கும் நூர்ஜஹானுக்கும் காதல் ஏற்படக்காரணமாயிருந்தது ஒரு புறா என்று. ஜஹாங்கீர் நூர்ஜஹானிடம் இரண்டு புறாக்களைக் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளச்சொல்லியிருந்தார். திரும்ப வந்து கேட்ட போது ஒன்று தான் இருந்தது. இன்னொன்று என்ன ஆயிற்று?' என்று கேட்டார். 'பறந்து போய்விட்டது' என்றாள். 'எப்படிப்பறந்தது?' என்று கேட்டார். 'இப்படித்தான் பறந்தது' என்று கூறி மற்றதையும் பறக்க விட்டாள். ஆனால் ஜஹாங்கீருக்குக் கோபம் வரவில்லை. காதல் தான் வந்தது. அந்தப்புறாவின் ஒரு முட்டையை எப்படியோ பெற்று அதை ஒரு விலையுயர்ந்த பாத்திரத்தில் வைத்துத்தன் கண் முன்னேயே தொங்க விட்டுக்கொண்டிருந்தார். பின்னர் அந்த முட்டை 'ஜஹாங்கீரீ அண்டா' என்ற பெயரில் ப்ரபலமடைந்தது. அதைத்தான் சென்ற ஆண்டு மேஜர் டக்ளஸ் 300 ரூபாய் கொடுத்து இந்தியாவில் ஒரு வியாபாரியிடம் வாங்கி வந்தார்."

"அப்படியா சேதி?"

"ஆமாம். ஆனால் இனிமேல் அவரால் என்னை மிஞ்ச முடியாது. என்னுடைய ‘அக்பரீ லோட்டா’ அவருடையதைக்காட்டிலும் ஒரு தலைமுறை பழையது."

ஆங்கிலேயர் 500 ரூபாய்களை ஜாவூலாலிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது ஜாவூலாலின் முகத்தைப்பார்க்க வேண்டுமே! ஆறு நாட்களாக மழிக்கப்படாமல் வளர்ந்ததிருந்த அவருடைய தாடியின் ஒவ்வொரு முடியிலிருந்தும் மகிழ்ச்சி வழிந்து கொண்டிருந்தது.

அவர் கேட்டார், "பில்வாஸீ! உங்களிடம் பணம் இல்லை என்று சொன்னீர்களே. எப்படி 250 ரூபாய் கொண்டு வந்தீர்கள்?''

"அந்த ரகசியம் எனக்கும் கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும். நீங்கள் கடவுளிடம் கேட்டுக்கொள்ளுங்கள். நான் போகிறேன்."

"நீங்கள் எங்கே போகிறீர்கள்? நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்."

"முதலில் உங்கள் பணத்தை எண்ணி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்."

அவரவருடைய பணத்தை எண்ணும் போது மனம் எப்படி ஒருமுகப்பட்டு விடுகிறது! ஜாவூலால் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது பில்வாஸீ சத்தமில்லாமல் நழுவி விட்டார்.

அன்றிரவு அவருக்குத்தூக்கமே வரவில்லை. இரவு ஒரு மணி இருக்கும். சத்தம் போடாமல் எழுந்து தன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் இருந்த சங்கிலியிலிருந்த சாவியை எடுத்தார். அறைக்குள் இருந்த பணம் வைக்கும் பெட்டியைத்திறந்தார். 250 ரூபாய்களை எடுக்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே வைத்தார். பெட்டியை மூடினார். மெல்ல அடி எடுத்து வைத்துத் தன் மனைவியின் சங்கிலியில் சாவியை மீண்டும் மாட்டினார். பின்னர் ஒரு நிம்மதிப்புன்னகையுடன் கொட்டாவி விட்டு விட்டுத்தூங்கினவர் தான். மறு நாள் காலை எட்டு மணி வரை எழுந்திருக்கவில்லை .