Sunday, July 7, 2013

பதஞ்சலி முனிவர்

சமீபத்தில் பதஞ்சலி முனிவர் இயற்றிய 'நடராஜ ஸ்தோத்ரம்' கேட்கும் பாக்கியம் கிடைததது . அதைப்பற்றி மேலும் அறிய முற்பட்ட போது கிடைத்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிவபெருமானின் பக்தர்களில் மிக முக்கியமானவர் மூன்று பேர். நந்தி, வ்யாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி.

நந்தியைப்பற்றி நம் எல்லாருக்கும் தெரியும்.

வ்யாக்ரபாதர் என்னும் பக்தர் தனக்குப் புலியின் கால்கள் வேண்டும் என வேண்டிப்பெற்றார். அதிகாலையில் பூஜைக்காக மலர்களைப்பறிக்கும் போது புலியின் கால்கள் இருந்தால் மரங்களின் மீது ஏறி மலர்களைப்பறிப்பது எளிது என்பதற்காக இந்த வேண்டுகோள். (புலிக்கு சம்ஸ்க்ருதத்தில் வ்யாக்ரம் என்று பெயர். புலியின் பாதத்தைக்கொண்டிருப்பதால் வ்யாக்ரபாதர்).

பதஞ்சலி முனிவரும் நமக்குத் தெரிந்தவர் தான். இன்று மிகவும் ப்ரபலமாக இருக்கும் யோகாசனங்களை உருவாக்கியவர் இவர் தான். இவருக்கு மேல் பாதி உடல் மனிதனைப்போலவும் கீழ்ப்பாதி பாம்பைப்போலவும் இருக்கும். இவருடைய தாய் தனக்கு மகப்பேறு வேண்டி இறைவனைத்தொழுத போது அவருடைய கையில் ஏதோ ஊர்வது போல் இருந்ததாம். ஒரு மிகச்சிறிய பாம்பு நெளிந்து கீழே விழுந்ததாம். சிறிது நேரத்தில் அது குழந்தையாக மாறிவிட்டதாம்.
('அஞ்சலி' என்றால் குவிந்த கை. 'பத' என்றால் விழுதல். குவிந்த கைகளில் இருந்து கீழே விழுந்ததால் பதஞ்சலி என்று பெயர்). இவருடைய மிக அழகான சிற்பம் ஈஷா யோக மையத்தில் இருப்பதை அனேகம் பேர் பார்த்திருக்கலாம்.

ஒரு நாள் இந்த மூவரும் சிவபெருமானின் நடனத்தைக்க்ண்டு களித்து விட்டு அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். பதஞ்சலி இந்த நடனத்தைப்பற்றி ஒரு ஸ்தோத்ரம் எழுத விரும்புவதாகத்தெரிவித்தார். மற்ற இருவரும் கிண்டலடித்தனர்-'உனக்குக் கொம்பும் இல்லை; காலும் இல்லை. உனக்கெல்லாம் ஏன் இந்த ஆசை' என்று. (நந்திக்குக் கொம்பைப்பற்றிப் பெருமை. வ்யாக்ரபாதருக்குத் தன் பாதங்களைப்பற்றிப் பெருமை.) பதஞ்சலிக்கு அதில் வருத்தம் இருந்தாலும் ரோஷம் வந்தது. 'அதனாலென்ன? நாம் கொம்பும் காலும் இஇல்லாமலே ஸ்தோத்ரம் இயற்றுகிறேன்' என்று கூறி ஒரு அற்புதமான ஸ்தோத்ரத்தை இயற்றியுள்ளார். அது 'பதஞ்சலி க்ருத சரண ஸ்ருங்க ரஹித நடராஜ ஸ்தோத்ரம்' என்று இன்றளவும் அறியப்படுகிறது. ஒரு இடத்தில் கூட கால் வாங்காமல், கொம்பு போடாமல் அவர் இயற்றியுள்ள இந்த ஸ்தோத்ரத்தை .எஸ். அருண் பாடியிருக்கிறார். கேட்டு ஆனந்தியுங்கள்.


2 comments:

  1. மிக்க நன்றி .....

    ReplyDelete
  2. ஒரு இடத்தில் கூட கால் வாங்காமல், கொம்பு போடாமல் பதஞ்சலி இயற்றியுள்ள அருமையான ஸ்தோத்திரத்தின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete