Thursday, July 11, 2013

இப்படியும் ஒரு பெண்ணா?



சம்ஸ்க்ருத பண்டிதர்களில் வாசஸ்பதி மிஸ்ரா என்னும் பண்டிதர் மிகவும் மதிக்கப்படுகிறார். இவர் பத்தாம் நூற்றாண்டில் பீகாரைச்சேர்ந்த மிதிலா என்ற பகுதியில் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. மிகச்சிறந்த பல நூல்களை இவர் இயற்றியிருந்தாலும் இவருக்கு இறவாப்புகழைத்தேடித்தந்தது இவர் இயற்றிய 'பாமதி' என்னும் நூல். இது ஆதி சங்கரரின் ப்ரம்ம சூத்திரத்துக்கு இவர் எழுதிய விளக்கம். இந்த நூலுக்கு இப்பெயர் எப்படி வந்தது என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு கதை.

வாசஸ்பதி மிஸ்ராவின் குரு தன் மகளான பாமதியை இவருக்கு மணம் செய்து கொடுத்து விட்டு சில நாட்களில் மரணமடைந்து விட்டார். அவர் இறக்கும் முன் ஆதி சங்கரரின் ப்ரம்ம சூத்திரத்துக்கு நல்ல ஒரு உரை எழுத வேண்டும் என்று தன் சீடனுக்குக் கட்டளை இட்டார். சீடரும் தன் குருவின் ஆணையை சிரமேற்கொண்டு இரவு பகல் பாராமல் தன் வேலையிலேயே ஈடுபட்டிருந்தார்.
அவருக்கு எந்த வகையிலும் தொந்தரவு தராமல் பாமதி அவருக்கு வேண்டிய உணவு, உடை மற்றும் விளக்குக்கு வேண்டிய எண்ணெய் ஆகியவற்றிற்கான ஏற்பாட்டை எப்படியோ சிரமப்பட்டு செய்து வந்தாள். நாட்கள் ஓடின. வாரங்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டன. பல வருடங்கள் கழித்து ஒரு நாள் தன் வேலையைச் செவ்வனே முடித்த வாசஸ்பதி மிஸ்ரா தன் வீட்டில் ஒரு வயதான பெண்மணி வேலை செய்து கொண்டிருப்பதைக்கண்டார்.

'நீ யாரம்மா?' என்று கேட்டார்.

'நான் பாமதி. உங்கள் மனைவி' என்று பதில் சொன்னாள்.

'என் மனைவியா?' நீ இவ்வளவு வயதானவளாக இருக்கிறாயே!' என்றார்.

'உங்களுக்கும் தான் வயதாகியிருக்கிறது' என்றாள்.

தன் முகத்தைக்கண்ணாடியில் பார்த்த வாசஸ்பதி மிஸ்ராவுக்குத்
தாங்கமுடியாத வருத்தம்.

'அடடா! என்ன காரியம் செய்து விட்டேன்! கணவனுக்குரிய என் கடமையில் தவறி விட்டேனே! இனி என்ன செய்தாலும் இளமை திரும்பி வராதே! நான் உனக்கு ஆற்றிய் தீங்குக்கு எப்படி பரிகாரம் செய்வேன்?' என்று வருந்தினார்.

'கவலைப்படாதீர்கள். நீங்கள் எழுதியுள்ள இந்த நூல் காலங்களைக்கடந்து நிற்கும். அதற்கு நானும் உதவியிருக்கிறேன் என்பதே எனக்கு மிகுந்த மன நிறைவைக்கொடுக்கிறது' என்றாள்.

'பாமதி! நீ ஒரு மிகச்சிறந்த பெண்மணி. என் மேல் கோபம் கொள்ளாமல் இத்தனை ஆண்டுகள் எனக்கு சேவை செய்திருக்கிறாயே! இதற்குக்
கைம்மாறாக இந்த நூலுக்கு உன்னுடைய பெயரையே சூட்டுகிறேன். இனி வரும் காலங்களில் மக்கள் என்னை மறந்தாலும் உன்னை மறக்க மாட்டார்கள்' என்று கூறி, தான் இயற்றிய மகோன்னதமான படைப்பிற்கு 'பாமதி' என்றே பெயரிட்டார்.

இன்றளவும் இந்த நூல் சிறந்த கல்வியாளர்களால் போற்றப்படுகிறது.

(இந்தப் பெண்ணப்பற்றி இன்றைய பெண்ணியவாதிகள் என்ன நினைப்பார்கள்!)

1 comment:

  1. மிகுந்த பொறுமைசாலி ...... பாமதியின் பொறுமை வேண்டுகிறேன் ........

    ReplyDelete