'பெயரில் என்ன இருக்கிறது?' என்று எல்லாரும் சொல்கிறார்களே தவிர, யோசித்துப்பார்த்தால் பெயரில் தான் எல்லாமே இருக்கிறது. மனிதன் காடுகளில் வாழ்ந்தகாலத்தில் கூடத் தன்னைச்சுற்றி இருந்த பொருட்களுக்கும் விலங்குகளுக்கும் ஏதோ ஒரு குறியீடு இட்டு அழைத்து வந்திருக்கிறான். முதலில் உடல் மொழியாகவும் கைகளின் சங்கேதமாகவும் இருந்த மொழி மெல்ல மெல்லக் குரலின் உதவியாலும், நாக்கின் உபயோகத்தாலும் வார்த்தைகளின் கட்டமைப்பாக மாறியது. எந்த மொழியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தை பெயர்ச்சொல் தான். பெயர் இன்றி எதுவுமே இல்லை.
மனிதன் தன்னைச்சுற்றியுள்ள பொருட்களை 'இது தான் இது' என்று அறிந்து கொள்ளவும் தான் அறிந்ததை
அதே போல் மற்றவரைப் புரிந்து கொள்ள வைக்கவும் முயன்றான். அந்த
முயற்சியின் வெற்றியாகத்தான் பெயர் வந்தது.'பெயர்' என்பது ஒரு பொருளை 'இது தான் அது' என்று வரையறுக்கவும், 'இது வேறெதுவும் அல்ல' என்று உறுதிப்படுத்தவும் தேவையான ஒரு சொல்லாயிற்று.
மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் வசதியானதும் உபயோகமானதும்
இந்தப் பெயர் தான். மனிதர்கள் மட்டும் அல்லாது விலங்குகளும்
பெயர் சொல்லி அழைத்தால் பதில் கொடுக்கின்றன. ஒரு புதியவனைக்கண்டவுடன்
குரைத்துக்கொண்டே ஓடிப்போய் அவனது காலைக்கவ்வும் நாய் தன் எஜமான் 'டைகர்' என்று அழைத்தவுடன்
புதியவனின் காலைவிட்டு விட்டுத் தன் எஜமானின் கையை நக்க ஓடுகிறது.
பெயர்கள் எப்போதுமே இன்பத்தைத்தருவதில்லை. ஒருவனை அவனுக்குப்பிடிக்காத ஒரு பெயரைச்சொல்லி அழைத்தால், அவனுக்குத்தாங்க முடியாத கோபம் வருகிறது. ஆனால்,அவனுக்குப் பிடித்தமான பெயரைச்சொல்லிக்கூப்பிட்டால், மிகவும் மகிழ்ந்து போகிறான்.
பெயர்களில், பிடித்தவை,
பிடிக்காதவை, மரியாதையானவை, மரியாதையற்றவை, பதவியைக்குறிப்பவை என்று பல வகைகள் உண்டு.
ஆச்சரியம் என்னவென்றால் சிலருக்கு அவரவருடைய பெயரைச்சொல்லி அழைத்தாலே
மரியாதைக்குறைவு என்று தோன்றுகிறது. பட்டப்பெயர் சொல்வது தான்
மரியாதை என்றாகிவிட்டது.
ஒருவனின் பெயரைக்கொண்டே அவனுடைய சமூகம், மதம் மற்றும் மொழியை ஓரளவு கண்டுபிடித்து விடலாம். இந்திய
பெயர்களுக்கும் இந்தியரல்லாதவரின் பெயர்களுக்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது.
இந்தியாவுக்குள்ளேயே, இந்து, முகமதிய, கிறிஸ்தவ மற்றும் பார்சி பெயர்களுக்குள் நிறைய
வேறுபாடுகள் இருக்கின்றன.
ஒருகுழந்தைக்குச்சூட்டப்படும் பெயர்கள் பெரும்பாலும் ஒரு பழைய மொழியில் இருந்து எடுக்கப்படுகின்றன. ஹீப்ரூவிலிருந்து 'பெஞ்சமின்', க்ரீக்கிலிருந்து 'ஆண்ட்ரூ', ஜெர்மனிலிருந்து 'ஆல்பெர்ட்' , இப்படி பல உதாரணங்கள் கொடுக்கலாம். ஆரம்பகாலத்தில் இப்பெயர்களுக்கெல்லாம் பொருள் அல்லது ஏதோ ஒரு நிகழ்ச்சியுடன் சம்பந்தம் இருந்தது.(டேவிட் என்றால் 'அன்புக்குரியவன்', சூசன் என்றால் 'லில்லி மலர்', மார்கரட் என்றால் 'முத்து').
இந்தியப்பெயர்கள் பலவாறான காரணங்களினால் வந்திருப்பினும் அவற்றில் மிகப்பெரிய அளவில் சம்ஸ்க்ருத மொழியின் பங்களிப்பு இருந்திருக்கிறது.இம்மொழி பெயர்களின் எல்லையற்ற சுரங்கமாகவே காணப்படுகிறது.
ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாற்றப்படும் போது பெயர்கள் பல மாற்றங்களுக்குள்ளாகின்றன.உதாரணத்துக்கு 'ஹென்றி' என்ற பெயர் ( இதன் பொருள்-வீட்டுத்தலைவன்) ஹாரி, ஹால், என்ரிகோ, ஹென்ரிக் என்றெல்லாம் மாறியிருக்கிறது.இதே போல் ப்ரபலமான சம்ஸ்க்ருதப்பெயர்கள் நம்ப முடியாத மாறுதல்களுக்குட்பட்டிருக்கின்றன.
கஷ்மீரி மொழியில், ‘கோவிந்தா’ என்ற பெயர் 'கோண்டூ' என்றும், ‘ஷிவா’ என்ற பெயர், 'ஷெவு' என்றும், ‘ஹரி’ என்ற பெயர் 'ஹரு' என்றும் மாறியிருக்கின்றன. இதே போல் ‘கங்கா’ என்ற பெயர் ‘கங்குஜ் ‘என்றும்,’லக்ஷ்மி’ என்ற பெயர் ‘லக்கிம்’என்றும் ‘பவானி’ என்ற பெயர் ‘போனி’என்றும் மாறியுள்ளன.
நம் தமிழிலும் இப்படிப்பட்ட சுருக்கங்களுக்குப்பஞ்சமே இல்லை.'பஞ்சாபகேசன்'என்ற பெயர் 'பஞ்சு'
ஆவதும், 'கிருஷ்ணமூர்த்தி''கிச்சு' அல்லது 'கிட்டு'
ஆவதும்,'லக்ஷ்மி' 'லச்சி'
ஆவதும் நமக்குத்தெரியாததா? ஆனால் இப்படி சுருக்கும்
போது இந்தப்பெயர்களுக்கு நம்மை அறியாமல் நாம் செய்யும் தீங்கை
நினைத்தால் திக்கென்றிருக்கிறது. 'ப்ரணதார்த்தி ஹரன்'
என்ற பெயரைப் 'ப்ரணதார்த்தி' என்று அழைக்கிறார்கள். 'தன்னை வணங்கியவனுடைய துயரங்களை
நீக்குபவன்' என்பது முழுப்பெயருக்கும் பொருள். இவர்கள் 'ப்ரணதார்த்தி' என்று அழைக்கும்
போது 'தன்னை வணங்கியவனுடைய துயரம்' என்று
அழைக்கிறார்கள். இந்தப் பொருள் புரிந்தால் அழைக்கப் படுபவருடைய
மன நிலை எப்படி இருக்கும்? 'ரஜனீஷ்' அல்லது
'ரஜினி காந்த்' என்றால் 'இரவின் தலைவன்', அதாவது 'சந்திரன்'
என்று பொருள். 'ரஜினி' என்றால் 'இரவு' என்று பொருள். இது தெரியாமல் எத்தனை பேர் தம் குழந்தைகளுக்கு 'நிஷா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்! 'நிஷா'
என்றாலும் 'இரவு' என்று தான்
பொருள்.'நிஷாந்த்' என்றால் விடியற்காலை
(இரவின் முடிவு). ஆனால் 'நிஷா' என்பது மிகவும் ப்ரபலமான ஒரு
பெயராக உள்ளது.
நம் முன்னோர்கள் மற்றும் உபநிஷதங்களின்
பெயர்கள் பல்வகைப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளுடன்
தொடர்பு உடையவைகளாகக் காணப்படுகின்றன.
'பரத்வாஜர்' என்ற பெயர் 'வானம்பாடியைக்குறிக்கும்.
'கௌசிகர்' என்ற
பெயருக்கு 'ஆந்தை'என்று பொருள்.
'கஷ்யப' ரிஷியின் பெயர் 'கச்சப்' என்ற வார்த்தையில் இருந்து வந்தது. 'கச்சப்' என்றால் 'ஆமை'.
'மதங்க' முனிவருக்குப்பெயர்
கொடுத்தது ஒரு யானை. 'மதங்க' என்றால்
'யானை'. பிள்ளையாருக்கு 'மாதங்க முகன்' என்று ஒரு பெயர் உண்டு.
'மாண்டூக்ய' உபநிஷதம்
'மண்டூக'த்தில் இருந்து வந்தது. 'மண்டூகம்' என்றால் 'தவளை'.
'தைத்ரீய உபநிஷதம் 'தித்ரி' என்ற பெயரில் இருந்து வந்தது. 'தித்ரி' என்றால் 'கௌதாரி'.
'நகுலன்' என்ற
பெயருக்குக் கீரி என்று பொருள்.
இன்னும் பல் பெயர்கள் ஒரு காரணத்துக்காகவே
வைக்கப்பட்டுள்ளன.
'துரோணர்' என்றால்
'கூடை' அல்லது 'பாத்திரம்'.
தமிழில் கூட 'தொன்னை' என்றொரு
சொல் உண்டு. 'துரோணர்' ஒரு கூடையில் பிறந்ததாக
நம்பப்படுகிறது. ஆகவே அவர் பெயர் 'துரோணர்'.
'த்ருத ராஷ்ட்ரன்' என்றால் 'தேசத்தைத்தாங்குபவன்' என்று பொருள். தன் தேசத்தைத்தாங்கி அதைத் தன் மகனுக்குக்கொடுக்க
அவன் என்ன பாடு பட்டான்!
ஆனால் பெரும்பாலான கௌரவர்களின்
பெயர்கள் 'துர்'
என்ற எழுத்தில் துவங்குகின்றன. 'துர்யோதனன்',
'துச்சாசனன்'.....என்று. இன்றும் கூடத் தன் மக்களுக்கு கௌரவர்களின் பெயரை யாரும் வைப்பதில்லை.
மகாபாரதத்தை எழுதிய வேதவ்யாசருக்கே அவர்கள் நடத்தை பிடிக்காததால் அப்படி
வைத்து விட்டாரோ?
தாத்தாவின் பெயர் கொண்டதால்
தான் பேரனுக்கு அப்படி ஒரு பெயர். இப்போது தமிழர்களில் எத்தனை 'ராமச்சந்திரங்கள்'
எத்தனை 'கிருஷ்ணமூர்த்திகள்', எத்தனை'சுப்ரமணியன்கள்'? இனி வரும்
காலங்களில் அப்படி இருக்காது.இப்போதைய இளம் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு
'Internet'ல் தேடித் தான் பெயர் வைக்கிறார்கள். 'Nameology' என்ற ஒரு துறை இப்போது மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
பெயரை வைத்து ஜோசியம் சொல்கிறார்கள். அல்லது பெயரை
மாற்றி நம் தலையெழுத்தை மாற்ற முடியும் என்கிறார்கள்.
'ரோமியோ அண்ட் ஜூலியட்' ல் 'What is there in a name? The
rose by any other name will smell as sweet ' என்று ஜூலியட் கூறுகிறாள். ஆனால், இப்போதுள்ள ரோஜா கூடத் தன் பேரை மாற்றினால் கோபித்துக்கொண்டு தன் மணத்தைக்குறைத்துக்கொண்டு விடுமோ என்னவோ!
(Prof. R.K. Koul எழுதிய 'Sociology of Names' என்ற புத்தகத்தைப் படித்ததன் தாக்கம் தான் இந்தப்பதிவு. நிறைய செய்திகள் அத்தப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.)
No comments:
Post a Comment