Monday, July 15, 2013

அக்பரின் லோட்டா

(பல ஆண்டுகளுக்கு முன் ஹிந்தியில் படித்த 'அக்பரீ லோட்டா'  (Akbari Lota) என்ற கதை எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று. நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் எல்லோரும் புத்திசாலிகளும் அல்ல. அடிமையாக இருந்த இந்தியர்கள் எல்லோரும் முட்டாள்களும் அல்ல என்பது இந்தக்கதையின் அடி நாதம். இதை நான் வரிக்கு வரி மொழி பெயர்க்கவில்லை. இதை எழுதியவர் அன்னபூர்ணானந்த் வர்மா (1895 -1962) என்னும் ஹிந்தி எழுத்தாளர். இந்தக்கதை நடந்த காலம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன். அதை நினைவில் வைத்துக்கொண்டு கதையைப்படிக்கவும்.)

அக்பரின் லோட்டா

லாலா ஜாவூலாலின் வீடு காசியில் உள்ள ஒரு கடைவீதியில் இருந்தது. மாடியில் அவர் குடியிருந்தார். கீழே நிறைய கடைகளைக்கட்டிப்போட்டிருந்தார். மாதம் 100 ரூபாய் வாடகை வந்தது. திருமணம் ஆகியிருந்தது. இன்னும் குழந்தைகள் ஆகவில்லை. செலவு அதிகம் இல்லை. நன்றாக சாப்பிட்டு நல்ல துணிமணிகள் உடுத்தி சுகமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், திடீரென்று ஒரு நாள் அவருடைய மனைவி 250 ரூபாய் வேண்டும் என்று கேட்ட போது ஜாவூலால் தடுமாறித்தான் போய் விட்டார். அவருடைய தடுமாற்றத்தைப் பார்த்த அவருடைய மனைவி சொன்னாள், "கவலைப்படாதீர்கள். நான் என்னுடைய அண்ணாவிடம் வாங்கிக்கொள்கிறேன்."

இதைக்கேட்டு ஜாவூலாலுக்கு சரியான கோபம் வந்தது. 250 ரூபாய்க்காக உன் அண்ணனிடம் பிச்சை கேட்பாயா? நானே கொடுக்கிறேன்."

"எனக்கு இந்த ஜன்மத்திலேயே வேண்டும்"

"ஒரே வாரத்தில் வாங்கிக்கொள்"

"ஒரு வாரம் என்றால் 7 நாட்களா? 7வருஷங்களா?"

இதற்கு மேல் கிண்டல் பொறுக்க முடியாத ஜாவூலால் சொன்னார், "இன்றிலிருந்து எண்ணி ஏழே நாட்களில் உனக்கு பணம் கொடுக்காவிட்டால் என் பெயர் ஜாவூலால் இல்லை."

"ஆண்பிள்ளையின் சபதமா?"

ஆமாம். ஆண்பிள்ளையின் சபதம் தான்".

நான்கு நாட்கள் விளையாட்டு போல் கழிந்து விட்டன. பணத்துக்கான ஒரு ஏற்பாடும் செய்ய முடியவில்லை. ஜாவூலாலுக்குக் கவலை பற்றிக்கொண்டுவிட்டது. ஒரு வேளை பணம் கொடுக்க முடியவில்லை என்றால்? இருந்திருந்து இப்போது தான் முதன்முறையாக அவருடைய மனைவி பணம் கேட்டிருக்கிறாள். பணம் புரட்ட முடியவில்லை என்று அவளிடம் எப்படி சொல்வது? சொன்னால் அவள் அதன் பிறகு தம்மை மதிப்பாளா? 'ஆண்பிள்ளையின் சபதம்' என்ற வீராப்பு வேறு!

இந்தக்கவலையிலேயே இன்னும் ஒரு நாள் கழிந்தது. ஐந்தாம் நாள் பயந்து போய் தன் நண்பர் பில்வாஸீ (Bilwasi Misra) மிஸ்ராவிடம் தன் சோகக்கதையைக்கூறினார். ஆனால் அந்த சமயம் பார்த்து அவரிடமும் அவ்வளவு பணம் இல்லை. ஆனாலும் சொன்னார், "என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எப்படியாவது பணம் புரட்ட முயற்சிக்கிறேன். பணம் கிடைத்தால் நாளை மாலை உன்னை வீட்டில் வந்து சந்திக்கிறேன்".

அடுத்த நாள் மாலையும் வந்தது. நாளை இத்தனை நேரம் பணத்தை  எண்ணி எண்ணி அவளிடம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரேயடியாக மானத்தை இழக்க வேண்டும். அவள் ஒன்றும் என்னைத்தூக்கில் போடப்போவதில்லை. சின்னதாக ஒரு சிரிப்பு சிரிப்பாள். அந்த சிரிப்பை நினைத்தாலே ஜாவூலாலுக்கு நெஞ்சைப்பிசைந்தது.இன்னும் பில்வாஸீ வரவில்லை. ஒரு வேளை அவர் வராவிட்டால்.....'

இந்தக்குழப்பத்திலேயே அவர் தன் வீட்டின் மொட்டை மாடியில் உலவிக்கொண்டிருந்தார். தாகம் எடுப்பது போல் இருந்தது. தண்ணீர் வேண்டும் என்று குரல் கொடுத்தார். வேலைக்காரன் இல்லை. அவருடைய மனைவியே தண்ணீர் கொண்டு வந்தாள். ஆனால் டம்ளர் கொண்டுவர மறந்து விட்டாள். ஒரு பித்தளை லோட்டாவில் கொண்டுவந்தாள். (லோட்டா என்பது தண்ணீர் குடிக்க உபயோகிக்கும் ஒரு பாத்திரம். சிறிய செம்பு போல் இருக்கும். கழுத்து குறுகியும் வயிறு அகன்றும் இருக்கும்)
அதை வாங்கி ஓரிரண்டு வருடங்கள் தான் ஆகின்றன. ஆனால் அதனுடைய விசித்திரமான உருவத்தால் அதைக்கண்டாலே ஜாவூலாலுக்குப்பிடிக்காது.

தன் கோபத்தை விழுங்கிக்கொண்டு லோட்டாவைத்தூக்கிக் குடிக்கலானார். அப்போது அவர் மொட்டை மாடியின் கைப்பிடிச்சுவரருகே நின்று கொண்டிருந்தார். எப்பொழுது அவர் கையில் இருந்து நழுவியதோ, ஒரு நொடியில் கீழே விழுந்து மறைந்தது. கீழே வரிசையாகக்கடைகள். நிறைய மனிதர்கள்.
யார் தலை மேல் விழுந்து வைத்ததோ, அவருக்கு என்ன ஆயிற்றோ என்று பயந்து நடுங்கிக்கொண்டே ஜாவூலால் அவசர அவசரமாகக் கீழே இறங்கினார். அதற்குள் அங்கே ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. அந்தக்கூட்டத்தின் நட்ட நடுவில் ஒரு ஆங்கிலேயர். அவர் தலையில் இருந்து கால் வரை தண்ணீரில் நனைந்திருந்தது. இது போதாதென்று தன் ஒரு பாதத்தைக் கையில் பிடித்துக்கொண்டு இன்னொரு பாதத்தினால் நடனம் வேறு ஆடிக்கொண்டிருந்தார்.

அந்த லோட்டா கீழே விழுவதற்கு முன் ஒரு கடையின் பெயர்ப்பலகையின் மீது இடித்து விட்டு நேரே அங்கு நின்றிருந்த ஆங்கிலேயரின் தலைமேல் அபிஷேகம் செய்துவிட்டு அவருடைய பூட்ஸின் மேல் போய் விழுந்திருந்தது.

ஜாவூலாலைப்பார்த்தவுடன் அந்த ஆங்கிலேயர் தன் மொழியில் உள்ள அத்தனை வசவுகளையும் ஒட்டு மொத்தமாக அவர் மேல் பொழிந்து தள்ளினார். அப்போது தான் ஜாவூலாலுக்கே தெரிந்தது ஆங்கிலத்தில் திட்டுவதற்கு இத்தனை வார்த்தைகள் உண்டென்று.

அதே நேரத்தில் கூட்டத்தைக்கிழித்துக்கொண்டு அவருடைய நண்பர் பில்வாஸீ மிஸ்ரா அங்கு வந்தார். முதல் காரியமாக ஒரு நாற்காலியைப்போட்டு அந்த ஆங்கிலேயரிடம் சொன்னார்," உங்கள் காலில் அடி பட்டு விட்டது போல் இருக்கிறது. நீங்கள் முதலில் இந்த நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்." அடுத்த காரியமாக அங்கு கூடியிருந்த அத்தனை பேரையும் அங்கிருந்து விரட்டினார்.

மிஸ்ராவுக்கு நன்றி தெரிவித்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்த ஆங்கிலேயர் அவரைக்கேட்டார்."உங்களுக்கு இவரைத்தெரியுமா?"

"யாரென்றே தெரியாது. இப்படி ஒரு தீங்கும் செய்யாத வழிப்போக்கர்களின் மேல் லோட்டாவினால் தாக்குபவர்களைத்தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை."

"என்னைப்பொருத்தவரை இவர் ஒரு ஆபத்தான பைத்தியக்காரர்."

"என்னைப்பொருத்தவரை இவர் ஒரு ஆபத்தான குற்றவாளி."

கடவுள் மட்டும் ஜாவூலாலின் கண்களுக்கு சாப்பிடும் சக்தியையும் கொடுத்திருந்தால் அவர் பில்வாஸியைக் கண்களாலேயே கடித்து விழுங்கியிருப்பார்.

என்ன நடக்கிறது என்றே அவருக்குப்புரியவில்லை. அவருடைய நண்பரான பில்வாஸிக்கு என்ன ஆயிற்று? அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?

அப்போது அந்த ஆங்கிலேயர் பில்வாஸியிடம் கேட்டார்,
"இப்போது என்ன செய்யலாம்?"

"ஐயா! உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் இந்த ஆளைப்பற்றி ரிபோர்ட் செய்து இவரை லாக் அப்பில் அடைக்கச்செய்யலாம்."

"போலீஸ் ஸ்டேஷன் எங்கிருக்கிறது?"

"பக்கத்தில் தான் இருக்கிறது. வாருங்கள், கூட்டிச்செல்கிறேன்."

"வாருங்கள்."

"அதற்கு முன் நீங்கள் அனுமதித்தால், இந்த ஆளிடமிருந்து இந்த லோட்டாவை வாங்கிக்கொண்டு வந்து விடுகிறேன். ஏன் ஐயா! இதை எனக்கு விற்கிறாயா?" இதற்கு நான் 50 ரூபாய் கொடுக்கத்தயாராக இருக்கிறேன்."

ஜாவூலால் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அந்த ஆங்கிலேயர் கேட்டார்," இந்த ஒன்றுக்கும் ஆகாத லோட்டாவுக்கு 50 ரூபாய் எதற்குக்கொடுக்கிறீர்கள்?"

"இதை ஒன்றுக்கும் ஆகாதது என்று கூறுகிறீர்களா? ஆச்சரியமாக இருக்கிறதே! உங்களை விஷயம் தெரிந்தவர் என்று நான் நினைத்தேனே!"

"சரி, சரி! விஷயம் என்னவென்று சொல்லுங்களேன்."

"இது வரலாற்று சிறப்பு மிக்க பொருள் என்று தெரிகிறது. உலகிலுள்ள ம்யூஸியத்து அதிகாரிகள் எல்லாம் தேடிக்கொண்டிருக்கும் அக்பரீ லோட்டா இதுவாகத்தான் இருக்க வேண்டும்."

என்ன சொல்லுகிறீர்கள்?

"ஆம் ஐயா! இது 16ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சி. ஹுமாயூன் பேரரசர் ஷேர்ஷா  சூரியிடம் தோற்றுப்போய் சிந்துப்பகுதியின் பாலைவனங்களில் அலைந்து கொண்டிருந்த சமயம். ஒரு நாள் அவருக்குத்தாங்க முடியாத தாகம். எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது ஒரு அந்தணர் இந்த லோட்டாவில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து அவருடைய உயிரைக்காப்பாற்றினார். பின்னர் மீண்டும் ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். அவருடைய மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அந்தணரைத் தேடிக்கண்டுபிடித்து இந்த லோட்டாவை அவரிடம் இருந்து வாங்கிக்கொண்டார். அதற்குப்பதிலாக இதே போல் 10 தங்க லோட்டாக்களை செய்வித்து அவருக்குப்பரிசாகக் கொடுத்தார். அக்பருக்கு மிகவும் பிடித்த லோட்டா இது. இதில் தண்ணீர் எடுத்துக் கை கால் கழுவிக்கொண்டு தான் அக்பர் நமாஸ் செய்வது வழக்கம்.ஆகவே இதற்கு அக்பரீ லோட்டா என்று பெயர் ஏற்பட்டு விட்டது. பின்னர் அரண்மனையிலேயே பல காலம் இருந்தது. எப்படியோ காணாமல் போய் விட்டது. இதனுடைய ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மாடல் தான் கல்கத்தா ம்யூஸியத்தில் இருக்கிறது. இந்த ஆளிடம் இது எப்படி வந்து சேர்ந்தது என்று தெரியவில்லை. ம்யூஸியக்காரர்களுக்குத் தெரிந்தால் ஏகப்பட்ட விலை கொடுத்து இதை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.நான் முந்திக்கொள்ள விரும்புகிறேன்."


இந்தக்கதையைக்கேட்கக்கேட்க ஆங்கிலேயரின் கண்கள் ஆச்சரியத்தினாலும், ஆசையினாலும் விரிந்து கொண்டே சென்றன.

"இதை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?"

"எனக்குப் பழைய, வரலாற்றுத்தொடர்புள்ள பொருள்களைச் சேகரிப்பதில் விருப்பம் அதிகம்."

"எனக்கும் பழைய வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை சேகரிப்பதில் விருப்பம். உண்மையில் இந்த லோட்டா என் தலையில் விழுந்த போது கூட நான் அதைத்தான் செய்து கொண்டிருந்தேன். இந்தக்கடையில் பித்தளை விக்கிரகங்கள் சிலவற்றை வாங்குவதற்காக பேசிக்கொண்டிருந்தேன்."

"இருந்தாலும் லோட்டாவை நான் தான் வாங்குவேன்."

"நீங்கள் எப்படி வாங்குவீர்கள்? நான் தான் வாங்குவேன். எனக்கு உரிமை இருக்கிறது."

அப்படி என்ன உரிமை?

"இந்த லோட்டாவின் தண்ணீரில் ஸ்னானம் செய்தது நானா, நீங்களா?

"நீங்கள் தான்."

"இது என் காலில் விழுந்ததா உங்கள் காலிலா?"

"உங்கள் காலில் தான்."

"என் கால் விரல் வீங்கி இருக்கிறதா, உங்களுடையதா?"

"உங்களுடையது தான்."

"அப்படியென்றால் இதை வாங்கும் உரிமையும் எனக்குத்தான்."

"இதெல்லாம் சரியில்லை. நீங்களும் விலை சொல்லுங்கள். நானும் விலை சொல்கிறேன். யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்கள் வாங்கிக்கொள்வோம்."

"அப்படியானால் சரி. நீங்கள் 50 ரூபாய் கொடுக்கிறீர்கள் என்றால் நான் 100 ரூபாய் கொடுக்கிறேன்."

"நான் 150 ரூபாய் கொடுக்கிறேன்."

"நான் 200 ரூபாய் கொடுக்கிறேன்."

"நான் 250 ரூபாய் கொடுக்கிறேன்" என்று சொல்லி பில்வாஸி 250 ரூபாய்க்கான நோட்டுக்களை ஜாவூலால் முன் எறிந்தார்.

ஆங்கிலேயருக்கு வெறி தலைக்கேறி விட்டது. "இதோ, நான் 500 ரூபாய் கொடுக்கிறேன். இப்போது என்ன சொல்கிறீர்கள்?"

பில்வாஸியின் முகம் வாடி விட்டது. "என்னால் 250 ரூபாய்க்கு மேல் கொடுக்க முடியாது. நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள்" என்று சொல்லித் தன் நோட்டுகளைப்பொறுக்கிக்கொண்டார்.
இதைக்கேட்ட ஆங்கிலேயரின் முகம் ஒரேயடியாக மலர்ந்து போயிற்று. "இனி நான் சந்தோஷமாக என் தேசத்துக்குத் திரும்பிச்செல்வேன். அந்த மேஜர் ட்க்ளஸின் பெருமையைக்கேட்டுக் கேட்டு என் காதுகள் புளித்து விட்டன.

"மேஜர் ட்க்ளஸ் யார்?"

"அவர் என்னுடைய அண்டை வீட்டுக்காரர். பழைமையான பொருட்களை வாங்கிச்சேகரிப்பதில் அவருக்கும் எனக்கும் எப்பொழுதும் போட்டி தான். சென்ற முறை இந்தியா வந்த பொழுது அவர் ஒரு 'ஜஹாங்கீரீ அண்டா' ( ஹிந்தியில் அண்டா என்றால்  முட்டை என்று பொருள்) வாங்கி வந்தார்.

"ஜஹாங்கீரீ அண்டாவா?"

ஆமாம். ஜஹாங்கீரீ அண்டா தான். அவருக்குத்தான் இந்தியாவில் இருந்து இப்படிப்பட்ட பொருட்களை வாங்கி வர முடியும் என்ற நினைப்பு."

"அது சரி. ஜஹாங்கீரீ அண்டா என்பது என்ன?

"அதுவா? உங்களுக்குத்தெரிந்திருக்கும், ஜஹாங்கீருக்கும் நூர்ஜஹானுக்கும் காதல் ஏற்படக்காரணமாயிருந்தது ஒரு புறா என்று. ஜஹாங்கீர் நூர்ஜஹானிடம் இரண்டு புறாக்களைக் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளச்சொல்லியிருந்தார். திரும்ப வந்து கேட்ட போது ஒன்று தான் இருந்தது. இன்னொன்று என்ன ஆயிற்று?' என்று கேட்டார். 'பறந்து போய்விட்டது' என்றாள். 'எப்படிப்பறந்தது?' என்று கேட்டார். 'இப்படித்தான் பறந்தது' என்று கூறி மற்றதையும் பறக்க விட்டாள். ஆனால் ஜஹாங்கீருக்குக் கோபம் வரவில்லை. காதல் தான் வந்தது. அந்தப்புறாவின் ஒரு முட்டையை எப்படியோ பெற்று அதை ஒரு விலையுயர்ந்த பாத்திரத்தில் வைத்துத்தன் கண் முன்னேயே தொங்க விட்டுக்கொண்டிருந்தார். பின்னர் அந்த முட்டை 'ஜஹாங்கீரீ அண்டா' என்ற பெயரில் ப்ரபலமடைந்தது. அதைத்தான் சென்ற ஆண்டு மேஜர் டக்ளஸ் 300 ரூபாய் கொடுத்து இந்தியாவில் ஒரு வியாபாரியிடம் வாங்கி வந்தார்."

"அப்படியா சேதி?"

"ஆமாம். ஆனால் இனிமேல் அவரால் என்னை மிஞ்ச முடியாது. என்னுடைய அக்பரீ லோட்டா அவருடையதைக்காட்டிலும் ஒரு தலைமுறை பழையது."

ஆங்கிலேயர் 500 ரூபாய்களை ஜாவூலாலிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது ஜாவூலாலின் முகத்தைப்பார்க்க வேண்டுமே! ஆறு நாட்களாக மழிக்கப்படாமல் வளர்ந்ததிருந்த அவருடைய தாடியின் ஒவ்வொரு முடியிலிருந்தும் மகிழ்ச்சி வழிந்து கொண்டிருந்தது.

அவர் கேட்டார், "பில்வாஸீ! உங்களிடம் பணம் இல்லை என்று சொன்னீர்களே. எப்படி 250 ரூபாய் கொண்டு வந்தீர்கள்?''

"அந்த ரகசியம் எனக்கும் கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும். நீங்கள் கடவுளிடம் கேட்டுக்கொள்ளுங்கள். நான் போகிறேன்."

"நீங்கள் எங்கே போகிறீர்கள்? நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்."

"முதலில் உங்கள் பணத்தை எண்ணி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்."

அவரவருடைய பணத்தை எண்ணும் போது மனம் எப்படி ஒருமுகப்பட்டு விடுகிறது! ஜாவூலால் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது பில்வாஸீ சத்தமில்லாமல் நழுவி விட்டார்.

அன்றிரவு அவருக்குத்தூக்கமே வரவில்லை. இரவு ஒரு மணி இருக்கும். சத்தம் போடாமல் எழுந்து தன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் இருந்த சங்கிலியிலிருந்த சாவியை எடுத்தார். அறைக்குள் இருந்த பணம் வைக்கும் பெட்டியைத்திறந்தார். 250 ரூபாய்களை எடுக்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே வைத்தார். பெட்டியை மூடினார். மெல்ல அடி எடுத்து வைத்துத் தன் மனைவியின் சங்கிலியில் சாவியை மீண்டும் மாட்டினார். பின்னர் ஒரு நிம்மதிப்புன்னகையுடன் கொட்டாவி விட்டு விட்டுத்தூங்கினவர் தான். மறு நாள் காலை எட்டு மணி வரை எழுந்திருக்கவில்லை .





No comments:

Post a Comment