ஒரு சிறிய ஸ்லோகத்தைச்சுற்றி எழுதப்பட்ட சுவையான கதை இது. இதில் எவ்வளவு சதவீதம் உண்மை என்பது தெரியவில்லை. ஆனால்,
பாரவி(Bharavi) என்ற பெயரில் ஒரு மகாகவி இருந்ததும்
அவர் எழுதிய 'கிராதார்ஜுனீயம்' (Kiraathaarjuneeyam) என்ற நூல் சம்ஸ்க்ருத இலக்கியத்தில் தனக்கிணையில்லாத ஒரு இடம் பெற்றிருந்ததும்
உண்மை.
கோதாவரி நதிக்கரையில்
மஹாதேவ் என்ற பெயருடைய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மூத்த மகனான பாரவி சிறு வயது
முதற்கொண்டே மிகச்சிறந்த நினைவாற்றலும், கவிதை புனையும் திறமையும்
பெற்று விளங்கினான். அவனுடைய ஊர் மக்கள் மட்டுமல்லாது அக்கம்பக்கத்து
ஊர்க்காரர்களும் அவனுடைய திறமைகளை வியந்து போற்றினர்.
ஆனால் ஒரே ஒருவர் மட்டும்
அவனுடைய திறமைகளை சற்றும் மதிக்கவில்லை. அவர் வேறு யாரும் அல்ல. அவனுடைய தந்தை தான்.
மற்றவர் புகழ்வதைக்கேட்டு அவன் மிகவும் மகிழ்ச்சி அடையும் போது,
'இது என்ன பெரிய விஷயம்! சிறு பிள்ளைத்தனமாக அல்லவா
இருக்கிறது!' என்பார்.
பாரவிக்கு இதில் மிகவும்
வருத்தம். அவனும் பொறுத்துப்பொறுத்துப்பார்த்தான்.
அவனுடைய தந்தையின் அபிப்பிராயம் மாறவேயில்லை. ஒவ்வொரு
முறையும் தன் தந்தையிடம் அவமானப்படும் போதும் அவனுக்குக்கோபம் அதிகரித்துக் கொண்டே
வந்தது.
ஒரு நாள், 'இனி பொறுக்க முடியாது,அவரை அடித்தே கொன்று விடலாம்' என்று எண்ணிக்கொண்டு ஒரு
பெரிய தடியை எடுத்துக்கொண்டு தன் வீட்டின் கதவைத்திறக்க முயன்றான். அப்போது அவனுடைய தாய் அவனைப்பற்றி அவனுடைய தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தது
அவன் காதில் விழுந்தது. 'ஏன் எப்பொழுது பார்த்தாலும் பாரவியைக்கடிந்து கொண்டே இருக்கிறீர்கள்? அவனுக்கு அதில் எவ்வளவு வருத்தம் தெரியுமா?
பாவம், குழந்தை! எவ்வளவு
பேர் புகழ்ந்தாலும் நீங்கள் ஒரு நல்ல வார்த்தை சொன்னால் தான் அவனுக்கு திருப்தி உண்டாகும்'
என்றாள்.
அதற்கு அவர், ' அசடே! உனக்கு இது புரியவில்லையா?
அவனுடைய திறமைகளைப்பற்றி நானும் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால் எல்லாரும் புகழ்ந்து கொண்டே இருந்தால் அவனுக்கு கர்வம் வந்து விடும்.
கர்வம் வந்து விட்டால் அதன் பின் முன்னேற்றம் இருக்காது; மாறாக, அழிவும் தொடங்கி விடும். அவன்
இன்னும் நிறைய முன்னேறுவான். அவனுடைய எதிர்காலம் மிகவும் நன்றாக
இருக்கும். உலகம் போற்றும் கவிஞனாக அவன் விளங்கும் நாளுக்காகத்தான்
நான் காத்துக்கொண்டிருக்கிறேன்' என்றார்.
இதைக்கேட்டுக்கொண்டிருந்த
பாரவியின் உடல் நடுங்கியது. கண்களில்
இருந்து கண்ணீர் பெருகியது. உள்ளே ஓடிச்சென்று தன் தகப்பனாரின்
காலில் விழுந்தான்.'தந்தையே! நான் மகா பாவி. உங்களுடைய நல்லெண்ணத்தைப்புரிந்து கொள்ள முடியாத முட்டாள். நான் இப்போது உங்களைக்கொல்வதற்காகத் தடியை எடுத்துக்கொண்டு வந்தேன்.
நீங்களிருவரும் பேசியதைக் கேட்காமல் இருந்திருந்தால் இத்தனை நேரம் உங்களைக்
கொன்றிருப்பேன். எனக்குத்தக்க தண்டனை கொடுங்கள்' என்று மன்றாடினான்.
மகாதேவ் அவனை எழுப்பினார். 'எழுந்திரு குழந்தாய்! இது உன் தவறு மட்டும் அல்ல.நானும் கொஞ்சம் அதிகமாகத்தான்
உன்னை அவமதித்திருக்கிறேன். போகட்டும். விடு. நீ உன் தவறை ஒப்புக்கொண்டு விட்டாய். அதுவே போதும். இனி உனக்கு தண்டனை வேண்டாம்' என்றார்.
ஆனால் பாரவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 'எனக்கு நீங்கள் தண்டனை கொடுக்கவில்லை
என்றால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது.தயவு செய்து இரக்கம்
காட்டாதீர்கள். நான் என்ன செய்யவேண்டும், சொல்லுங்கள்' என்றான்.
சிறிது யோசித்துவிட்டு
மகாதேவ் சொன்னார், 'நீ சொல்வதும்
சரி தான். தண்டனை தான் உன்னைத்தூய்மைப்படுத்தும். நீயும் உன் மனைவியும் உடனே உன் மாமனாரின் வீட்டுக்குச்செல்லுங்கள்.
நானாக உன்னை அழைக்கும் வரை என்ன நடந்தாலும் நீ அங்கேயே தான் இருக்க வேண்டும்'.
பாரவிக்கோ ஆச்சரியம். 'மாமனாரின் வீட்டில் சுகமான வாழ்வு
தானே! அன்பும் மதிப்பும் நிறைய கிடைக்குமே! இது எப்படி தண்டனையாகும்?' என்று நினைத்தான்.
ஆயினும் அப்பாவிடம் மேலும் வாதிட விரும்பாமல் உடனே தன் மனைவி ஜானகியை அழைத்துக்கொண்டு எந்தப்பொருளையும்
எடுத்துக்கொள்ளாமல் உடுத்த துணியுடன் தன் மாமனாரின் வீட்டுக்குச்சென்றான்.
பாரவியின் மாமனாரும் கல்வி கேள்விகளில் சிறந்தவர். அவருக்கு இந்த மகள் மட்டுமன்றி
இன்னும் இரண்டு மகன்களும் இருந்தார்கள். எல்லாரும் கூட்டுக்குடும்பமாக வசித்தார்கள். கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் வந்த வருமானத்தில் அனைவரும்
ஓரளவு வசதியுடன் வாழ்ந்து வந்தார்கள்.
பாரவியையும் அவனுடைய மனைவி ஜானகியையும் அவர்கள் எல்லாரும்
மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். நடந்ததை பாரவி விவரித்து விட்டு இனி தன்
தந்தையார் தன்னை அழைக்கும் வரை அங்கே தான் இருக்கப்போவதாகத்தெரிவித்தான். இதைக் கேட்ட உடனேயே அவர்களுடைய முகம் மாறிவிட்டது. 'சரி,
சரி' உள்ளே போங்கள்' என்றார்கள்.
பாரவியும் அவனுடைய மனைவியுமே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி வந்தது.
உணவு உண்பதற்குக்கூட அவர்களை யாரும் அழைக்கவில்லை. பசித்தால் அவர்களே போய்ச்சாப்பிட வேண்டிய நிலை. நல்ல
நாள், பண்டிகை என்றால், எல்லாரும் சிரித்து
மகிழ்வர். ஆனால், இவர்கள் இருவரையும் எதிலும்
சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். எல்லாருக்கும் புதுத்துணி எடுத்தாலும்
இவர்கள் இருவருக்கும் பழைய துணிகள் தாம்.'நாளாக நாளாக,
அங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நரகமாக இருந்தது.
இத்தனைக்கும் இடையில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பாரவியின்
கவிதைத்திறன் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஜானகி அவனிடம் வந்தாள். 'என் தோழி ஒருத்தி மிகவும் வசதியாக இருக்கிறாள். அவளுக்கு
கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு ஒரு நல்ல கவிதை
எழுதிக்கொடுங்கள். அவள் நல்ல சன்மானம் கொடுப்பாள். நாம் பணம் கொடுத்தால் நம் நிலைமை கொஞ்சம் சீரடையும்' என்றாள்.
'அப்படியா? யார் அது?
நீ இது வரை அவளைப்பற்றி சொன்னதேயில்லையே!'
'அவளை சமீபத்தில் தான் மீண்டும் பார்த்தேன்.
அவளுடையது ஒரு விசித்திரமான கதை. அவளுடைய கணவர்
அவள் மகனுக்கு ஏழு வயது இருக்கும் போது வெளியூரில் போய் வியாபாரம் செய்து சம்பாதித்துக்கொண்டு
வருகிறேன் என்று போனவர் வருடக்கணக்காக வரவேயில்லை. அவரைத்தேட
என் தோழி எவ்வளவோ முயற்சிகள் செய்தும் ஒன்றும் பயன் இல்லை. இறுதியில்
தன் குடும்பத்தொழிலை இவளே எடுத்து நடத்தத் தொடங்கினாள். கடவுள்
அருளால் நல்ல முன்னேற்றம். இப்போது அவள் மிகவும் வசதியாக இருக்கிறாள்.
வீட்டை மாற்றிப்பெரியதாகக்கட்டி விட்டாள். அவளுடைய
மகனும் நன்றாக வளர்ந்து அவளுக்கு உதவியாக இருக்கிறான். அவள் நிறைய
தான தருமங்கள் செய்கிறாள். என்றாவது ஒரு நாள் தன் கணவன் திரும்பி
வருவான் என்று நிச்சயமாக நம்பிக் கொண்டிருக்கிறாள்' என்றாள்.
சரி, என்று பாரவி உடனே ஒரு ஸ்லோகம் எழுதி ஜானகிக்குக்கொடுத்தான் 'இந்த ஸ்லோகம் நான் இனி எழுதப்போகும் என்னுடைய காவியத்தில் இடம் பெறும். இப்போது இதைக்கொண்டு போய்க்கொடு. முதன்முதலில் இதைப்பார்க்கப்போவது உன் தோழி தான்' என்றான். அவளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் தோழியிடம் சென்று அதைக்காட்டினாள். அதைப்படித்த அவளுடைய தோழி மிகவும் மகிழ்ந்து நிறைய பரிசுகளும் துணிமணிகளும் ஜானகிக்குக் கொடுத்து அனுப்பினாள்.
அது மட்டும் அன்றி இந்த ஸ்லோகத்தை ஒரு நல்ல பட்டுத்துணியில் அழகாக எழுதித் தன் அறைக்கு வெளியே முன் அறையின் சுவற்றில் மாட்டச்செய்தாள்.
இதன் இடையே அவளுடைய கணவனும்
தன் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தான். பதினோரு வருடங்கள் கழித்துத் தன் குடும்பத்துடன் இருக்க வேண்டும்
என்ற விருப்பத்தில் அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான். எண்ணற்ற
நகைகளும், பட்டுத்துணிகளும் மற்றும் பல் விலையுயர்ந்த பொருட்களும்
அவனுக்குப்பின்னே மாட்டு வண்டிகளில் வந்தன.
அன்று சித்திரை மாதத்து
பௌர்ணமி நாள். வானில் முழு
நிலவு ஒளி வீசிக்கொண்டிருந்தது. தன் வண்டிகளை நகரத்துக்கு வெளியே
நிறுத்தி வைத்து விட்டுத் தான் மட்டும் குதிரை மீது ஏறிக்கொண்டு தனக்கு நன்கு பழக்கப்பட்ட
வீதிகளில் மிகுந்த ஆவலுடன் பயணித்துக்கொண்டு வந்தான். அவன் வீடு
இருந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய மாளிகை இருந்தது. அவனுக்கு ஒரே
யோசனையாகப்போயிற்று. மெதுவாகக்குதிரையை விட்டு இறங்கித் தயக்கத்துடன்
வீட்டுக்கதவைத்தட்டினான். சிறிது நேரத்தில் அவனுக்குப் பழக்கப்பட்ட
ஒரு வேலையாள் கதவைத்திறந்தான். அவன் ஆச்சரியத்தில் கூக்குரல்
இடுவதற்கு முன் அவனைத்தடுத்து அமைதியாக இருக்கச்சொல்லி விட்டு மெதுவாகப்படுக்கை அறைப்பக்கம்
சென்றான். ஜன்னல் கதவுகள் திறந்து இருந்தன. குளிர்ந்தகாற்று வீசிக்கொண்டிருந்தது. அவனுடைய மனைவி
முன்பிருந்ததை விட அழகாக ஆகியிருந்தாள். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
அவளருகே ஒரு அழகான வாலிபனும் உறங்கிக்கொண்டிருந்தான்.
கோபம் கொப்பளிக்க அவன்
வாளை உருவிக்கொண்டு அந்த வாலிபனைக்கொல்வதற்காகப் படுக்கை அறை வாயிலை நோக்கி நடந்தான். தற்செயலாக அவன் பார்வை அங்கே தொங்கிக்
கொண்டிருந்த பட்டுத்துணி மீது பட்டது. அதில் எழுதப்பட்டிருந்த
வார்த்தைகளின் அழகும், ஆழ்ந்த பொருளும் அவனைக்கட்டிப்போட்டன.
ஆர்வத்துடன் அதைப்படித்தான்.
'सहसा विदधीत न क्रियाम्
अविवेकाः परमापदाम् पदम।
व्रुणुते हि विम्रुश्य कारिणम्
गुणलुब्धाः स्वयमेव सम्पदाः॥'
अविवेकाः परमापदाम् पदम।
व्रुणुते हि विम्रुश्य कारिणम्
गुणलुब्धाः स्वयमेव सम्पदाः॥'
பொறுமையை உபதேசிக்கும் இந்த ஸ்லோகத்தின் பொருள்:
'அவசரப்பட்டுக் காரியத்தில் இறங்காதே.
ஆத்திரம் நிறந்த மனம் ஆபத்துக்களின் இருப்பிடம்.
யோசித்து செயல் செய்பவன் எப்போதும் செழிப்புடன் இருப்பான்.'
மிகச்சுருக்கமாகக்கூறப்பட்டிருந்த இந்த சொற்களின் பொருள் அவன் உள்ளத்தை ஊடுருவியது.
கொஞ்சம் நிதானித்து,
உருவிய வாளுடனேயே கதவைத்தட்டினான்.கதவைத்திறந்த அவன் மனைவி மகிழ்ச்சியில் கூவினாள். அடுத்த நிமிடம் தன் கணவனின் கண்களில் இருந்த சந்தேகத்தையும் கோபத்தையும் உணர்ந்தாள்.உடனே தூங்கிக்கொண்டிருந்த மகனை எழுப்பி, 'மகனே! இங்கே பார். உன் தந்தை வந்திருக்கிறார்' என்றாள்.தன் மனைவிக்கு அருகில் படுத்துறங்கிய வாலிபன் தன் மகன் தான் என்று அறிந்தவுடன் அவள் கணவன்
மிக்க மகிழ்ச்சியுடன் அவனைக்கட்டித்தழுவினான். அந்த ஸ்லோகத்தை மட்டும் படிக்காமல் இருந்திருந்தால் இத்தனை நேரம்
என்ன நடந்திருக்கும் என்று எண்ணவே அவன் உள்ளம் நடுங்கியது.
மறு நாள் மிகுந்த மரியாதையுடன்
பாரவியையும் அவனது மனைவியையும் தன் வீட்டுக்கு அழைத்து அவர்கள் இருவருக்கும் நிறைய
பொன்னும் பொருளும் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினான். பாரவியின் புகழ் பரவத்தொடங்கியது.
அவனுடைய தந்தையார் காதிலும்
இது எட்டியது. மிகுந்த மகிழ்வுடன்
அவர் பாரவியையும் அவன் குடும்பத்தையும் திரும்ப அழைத்துக்கொண்டார். பாரவி மேலும் மேலும் நல்ல கவிதைகளையும் காவியங்களையும் படைத்தான். அவன் எழுதிய 'கிராதார்ஜுனீயம்' என்ற காவியம் அவனுடைய எழுத்துக்களுக்கு சிகரமாக அமைந்தது.
No comments:
Post a Comment