Wednesday, October 16, 2013

வார்த்தைகளும் வேற்றுமை உருபுகளும் -1



வார்த்தைகளும் வேற்றுமை உருபுகளும் -1


வார்த்தைகளுடன் வேற்றுமை உருபுகள் சேரும் போது அந்த வார்த்தைகள் எவ்வாறு மாறுகின்றன என்பது ஸம்ஸ்க்ருதம் கற்பவர் அறியவேண்டியவற்றில் மிகவும் முக்கியமானது. தமிழிலும் இது உண்டு. உதாரணத்துக்கு,

1.ராமன்
2.ராமனை
3.ராமனால், ராமனுடன், ராமனோடு
4.ராமனுக்கு
5.ராமனிடமிருந்து
6.ராமனுடைய
7.ராமன் மேல்
8.ஏ ராமா!

இதே போல் பிரதிப்பெயர்ச்சொற்களுக்கும் மாற்றங்கள் வருகின்றன.

நான்
என்னை
என்னால், என்னுடன், என்னோடு
எனக்கு
என்னிடமிருந்து
என்னுடைய
என் மேல்
..........

ஆனால், சம்ஸ்க்ருதத்தில் ஒரு சொல் எந்த உயிர் எழுத்தில் முடிகிறது என்பதைப் பொருத்து இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. மேலும் சம்ஸ்க்ருதத்தில் ஒருமை, பன்மை மட்டும் அன்றி, இருமை என்று ஒன்று உண்டு. இது அவ்வளவாக உபயோகப்படாவிட்டாலும், சில இடங்களில் வரும். (உ-ம்) ராம லக்ஷ்மணர்கள் என்பதற்கு 'राम लक्ष्मणौ' என்று வரும் .இறைவனின் இரு பாதங்களுக்கு 'पादौ' என்று வரும். நாம் இப்போது ஒருமை, பன்மைகளை மட்டும் பார்க்கலாம்.


अकारान्त: पुल्लिन्ग: - 'राम' शब्द:

'அ' வில் முடியும் ஆண்பால் சொல்- 'ராம'


ஒருமை                             பன்மை

राम:     ராமன்                       रामा: ராமர்கள்
रामम्    ராமனை                     रामान् ராமர்களை
रामेण    ராமனால், ராமனுடன்,         रामै:  ராமர்களால், ராமர்களுடன்,
रामाय    ராமனுக்கு                   रामेभ्य:   ராமர்களுக்கு
रामात्    ராமனிடமிருந்து              रामेभ्य:   ராமர்களிடமிருந்து
रामस्य    ராமனுடைய                 रामाणाम्  ராமர்களுடைய
रामे      ராமன் மேல்                 रामेषु    ராமர்களின் மேல்
राम्      ஏ ராமா!                     रामा:    ஏ ராமர்களே!







இவற்றை மட்டும் படித்து விட்டால், நிறைய வார்த்தைகளுக்கு பொருள் புரிந்து விடும். 'அ' வில் முடியும் பெரும்பாலான ஆண்பால் சொற்கள் இதே போல் தான் மாறும்.




Monday, October 14, 2013

ஸ்லோகங்களைப்புரிந்து கொள்ள சில முக்கியமான வார்த்தைகள்



நான் முன்பே தெரிவித்துள்ளது போல, என்னுடைய ஸ்ம்ஸ்க்ருத அறிவு மிகவும் குறைவு. அதனால் தான், நான் திடீர் திடீரென்று, சில வார்த்தைகளின் உட்பொருளைப்ப்புரிந்து கொள்ளும் போது அந்த ஆனந்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த விஷயங்கள் உங்களில் சிலருக்கோ, பலருக்கோ, ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.

என் அனுபவத்தில், ஸ்லோகங்களைப்புரிந்து கொள்ள ஒரளவு வார்த்தைகளும், கொஞ்சம் வேற்றுமை உருபுகள் பற்றிய அறிவும் இருந்தால் போதும். முழுமையாக அல்ல. அவற்றின் முக்கிய செய்திகளைப்புரிந்து கொள்ள.

உதாரணத்துக்கு சில வார்த்தைகள்:

1. मामव- மாமவ -என்னைக்காப்பாற்று.

माम- மாம்- என்னை

अव- அவ- காப்பாற்று.

எத்தனை பாடல்களிலும் ஸ்லோகங்களிலும் இந்த வார்த்தைகள் உபயோகப்பட்டுள்ளன!

'மாதவ மாமவ தேவா!'
'மாமவ பட்டாபி ராமா!'
'மாமவ மீனாக்ஷி'
'மாமவ ரகுவீரா..'

சில கீர்த்தனைகளில், 'அவாவா' என்று வரும். அதாவது 'அவ'+'அவ'  'காப்பாற்று'
'காப்பாற்று' என்று இரண்டு முறை சொல்லப்பட்டிருக்கும்.


2. 'मम' -மம - என்னுடைய

அந்தணர்கள் செய்யும் சடங்குகளில் இந்த வார்த்தை திரும்பத்திரும்ப வரும். சம்ஸ்க்ருதம் தெரியாமல் புரோகிதர் சொல்வதை மட்டும்  திரும்பச்சொல்பவர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி சொல்ல வேண்டி வரும். பித்ருக்களுக்கு செய்யும் ஸ்ரார்த்தத்திலும், தானம் கொடுக்கும் போதும், 'ந மம' 'ந மம' என்று சொல்லுங்கள்' என்று புரோகிதர் சொல்லுவார். 'ந' 'न' என்றால் இல்லை என்று பொருள். ஒரு முறைக்கு
இருமுறையாக இது என்னுடையது இல்லை. உங்களுக்குக்கொடுத்து விட்டேன்' என்று சொல்லச்சொல்லுவார்.

3. 'अस्माकम' - 'அஸ்மாகம்' -எங்களுடைய

இரண்டு மூன்று பேர் சேர்ந்து செய்யும் சடங்குகளில், இந்த வார்த்தை வரும்.

திருமணம் ஆகட்டும், ஈமச்சடங்குகள் ஆகட்டும், அவற்றில் கூறப்படும் மந்திரங்கள் எவ்வளவு பொருள் பொதிந்தவை, மனதை உருக்குபவை, எண்ணங்களையே மாற்றக்கூடிய சக்தி உள்ளவை என்பதை நினைத்தால், எப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தை நாம் தவற விட்டு விட்டோம் என்று வருத்தமாக இருக்கிறது. இப்பவும் கூட நேரம் இருக்கிறது. அவர் அவர் இருக்கும் இடத்தில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்கலாம். என்னால் முடிந்ததை நான் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய பகிர்வுகள் மேலும் கற்க ஒரு  தூண்டு கோலாகப்பயன் பட்டால் கூட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.



அயி கி3ரி-நந்தி3னி!

மிகவும் பிரபலமான மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரத்தின் முதல் ஸ்லோகத்துக்கே முழுமையான பொருள் பலருக்குத்தெரியாது. காதுக்கு இனிய வார்த்தைகளுடன், மயக்கும் இசையுடன், நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஸ்தோத்திரங்களில் அதற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதன் பொருளை அறிந்து கொள்ளலாமா?


अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दिनुते
गिरिवरविन्ध्यशिरोऽधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते ।
भगवति हे शितिकण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरिकृते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ॥ १ ॥

Ayi Giri-Nandini Nandita-Medini Vishva-Vinodini Nandi-Nute
Giri-Vara-Vindhya-Shiro-[A]dhi-Nivaasini Vissnnu-Vilaasini Jissnnu-Nute |
Bhagavati He Shiti-Kannttha-Kuttumbini Bhuri-Kuttumbini Bhuri-Krte
Jaya Jaya He Mahissaasura-Mardini Ramya-Kapardini Shaila-Sute || 1 ||

அயி கி3ரி-நந்தி3னி நந்தி3த-மேதி3னி விஸ்வ-வினோதி3னி நந்தி3- நுதே
கி3ரி-வர-விந்த்4ய-ஷிரோ-(அ)தி4 நிவாசினி விஷ்ணு-விலாசினி ஜிஷ்ணு நுதே|
ப4க3வதி ஹே ஷிதிகண்ட2-குடு2ம்பி3னி பூ4ரி-குடு2ம்பி3னி  பூ4ரிக்ருதே
ஜெய ஜெய ஹே மஹிஷாசுர-மர்த்தினி ரம்ய-கபர்த்தி3னி ஷைலசுதே||


Meaning:

Salutations to the daughter of the mountain, who fills the world with joy, for whom, the whole world is a divine play and who is praised by Nandi,

Who dwells on the summit of the Vindhyas, which is the best of the mountains, who gives joy to Lord Vishnu as His sister and who is praised by Indra,

O Goddess, who is the consort of Neela kanta Shiva, who has abundance of relations in the world, (being the Cosmic mother), and who created such abundance,
Victory to you, the destroyer of the Demon Mahishasura, to you, who has beauticul locks of hair and who is the daughter of the mountain.


அயி- ஏ! விளிக்கும் சொல். கிரி-மலை. நந்தினி- மகள். நந்தித- மகிழ்விக்கின்ற மேதினி- உலகை ( மேதினி என்ற சொல் இதே பொருளில் தமிழிலும் உபயோகப்பட்டுள்ளது. " மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்"- ஔவையார்) விஸ்வ- உலகை. வினோதினி-விளையாட்டாக நினைப்பவளே. நந்தி நுதே- நந்தியால் புகழப்படுபவள்.

கிரி வர- மலைகளில் சிறந்ததாகிய ( வர- என்றால் மிகச்சிறந்தது என்று பொருள். ஆகையால் தான் நாம் நம் பெண்குழந்தைகளுக்கு வரன் பார்க்கிறோம். வெறும் பையன்களைப்பார்ப்பதில்லை) விந்திய-விந்திய மலையின். சிரோ -தலைக்கு ( சிகரத்துக்கு) அதி- மேல் நிவாசினி -வசிப்பவள். விஷ்ணு விலாசினி- ஒரு சகோதரியாக விஷ்ணுவை மகிழ்விப்பவள். ஜிஷ்ணு- இந்திரனால் .நுதே-புகழப்படுபவள்.

பகவதி! - தெய்வத்தாயே! ஹே!- ஏ! ஷிதிகண்ட2 -நீல நிறக்கழுத்து உடைய ( சிவனின்). குடு2ம்பி3னி-குடும்பத்தைச்சேர்ந்தவளே. பூ4ரி- ஏராளமானவர்கள் நிறைந்த.  குடு2ம்பி3னி-குடும்பத்தைச்சேர்ந்தவளே ( உலக மாதா அல்லவா) பூ4ரி- ஏராளமானவற்றைப் படைத்தவளே!  ( பூ4ரி போ4ஜனம்- என்றால் நிறைய பக்ஷணங்களோடு நிறைய பேருக்குப்பரிமாறி அவர்களைத்திருப்திப்படுத்துவது என்று பொருள். )
ஜெய ஜெய - வெற்றி உண்டாகட்டும்! ஹே- ஏ!  மஹிஷாசுர- எருமைவடிவில் வந்த அரக்கனை மர்த்தினி-அழித்தவளே!  ரம்ய- அழகிய கபர்த்தி3னி- பின்னலிட்ட சடையுடைய ஷைல - மலையின் சுதே - மகளே!||

ஏ! மலையின் மகளே!  உலகை மகிழ்விக்கின்றவளே! உலகை விளையாட்டாக நினைப்பவளே!  நந்தியால் புகழப்படுபவளே!

மலைகளில் சிறந்ததாகிய விந்திய மலையின்சிகரத்தின் மேல் வசிப்பவளே!. சகோதரியாக விஷ்ணுவை மகிழ்விப்பவளே! இந்திரனால் புகழப்படுபவளே!

தெய்வத்தாயே! நீல நிறக்கழுத்து உடைய சிவனின் குடும்பத்தைச்சேர்ந்தவளே! ஏராளமானவர்கள் நிறைந்த குடும்பத்தைச்சேர்ந்தவளே! ஏராளமானவற்றைப் படைத்தவளே!

எருமைவடிவில் வந்த அரக்கனை அழித்தவளே! அழகிய  பின்னலிட்ட சடையையுடையவளே!  மலையின் மகளே!

உனக்கு வெற்றி உண்டாகட்டும்!

Monday, October 7, 2013

மன்னிப்பு கேட்க ஒரு ஸ்லோகம்


करचरण कृतं वाक्कायजं कर्मजं वा
श्रवणनयनजं वा मानसं वापराधं
विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व
जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो

Kara-Caranna Krtam Vaak-Kaaya-Jam Karma-Jam Vaa |
Shravana-Nayana-Jam Vaa Maanasam Va-Aparaadham |
Vihitam-Avihitam Vaa Sarvam-Etat-Kshamasva |
Jaya Jaya Karunna-Abdhe Shrii-Mahaadeva Shambho ||

கர சரண க்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா|
ஸ்ரவண நயனஜம் வா, மானஸம் வா அபராத(4)ம்|
விஹிதம் அவிஹிதம் வா, ஸர்வம் ஏதத் க்ஷமஸ்வ|
ஜய ஜய கருணாப்(3)தே(4) ஸ்ரீ மஹாதே(3)வ ஷம்போ(4)||


ஸ்ரீ மஹாதேவ சம்புவிடம் நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக்கோரும் விதமாக அமைந்துள்ள இந்த ஸ்லோகம் படிக்கப்படிக்க நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எப்படியெல்லாம் தவறுகள் இழைக்கக்கூடும் என்பதை ஒன்று விடாமல் குறிப்பிட்டுள்ளது.

கர-கைகள்
சரண - கால்கள்/ பாதங்கள்
க்ருதம் -செய்தவை
வாக் - சொற்கள் ( அதனால் தான் கலைமகளுக்கு வாகீஸ்வரி என்ற பெயர். திரு நாவுக்கரசரின் பெயர் கூட வாகீசர் என்பது தான்- நாவுக்கரசர் என்பது வாகீசர் என்ற சொல்லின் தமிழாக்கம் தான்)
காயஜம் - உடலின் மூலமாகப்பிறந்தவை
கர்மஜம் - செய்கைகளின் மூலமாக செய்யப்பட்டவை
வா- அல்லது
ஸ்ரவண - காதுகளால் கேட்டதால் ஏற்பட்டவை
நயனஜம் - கண்களால் பார்த்ததால் உண்டானவை
வா -அல்லது
மானஸம் -மனத்தில் உதித்தவை
அபராத(4)ம் -  குற்றம்
விஹிதம்  - செய்யப்பட்டவை
அவிஹிதம்  - செய்யப்படாதவை
ஏதத் -இவை
ஸர்வம் - அனைத்தையும்
க்ஷமஸ்வ- மன்னித்தருள்வாய்
ஜய ஜய - வெற்றி உண்டாகட்டும்
கருணாப்(3)தே(4) - கருணைக்கடலே! ( 'அப்தி' என்றால் கடல். கருணாப்தி- கருணைக்கடல்.
கருணாப்(3)தே(4) என்பது விளிவேற்றுமை. இறைவனைக் கூவி அழைத்து இப்படி மன்னிப்பு கேட்பதாக
அமைக்கப்பட்டுள்ளது)

ஸ்ரீ மஹாதே(3)வ ஷம்போ(4)- ஸ்ரீ மஹாதேவ சம்புவே!||


கருணைக்கடலான மஹாதேவ சம்புவே! என்னுடைய குற்றங்கள் கைகளினால் செய்யப்பட்டவையோ,
கால்களினால் செய்யப்பட்டவையோ, சொற்களாலோ, உடலின் மூலமாகவோ, செய்கைகளின்
மூலமாகவோ செய்யப்பட்டவையோ, அல்லது காதுகளால் கேட்டதாலோ,  கண்களால் பார்த்ததாலோ
அல்லது மனத்தில் நினைத்ததாலோ செய்யப்பட்டவையோ, செய்யப்பட்டவையோ அல்லது செய்யப்படாதவையோ, எப்படி இருந்தாலும், இவை அனைத்தையும் மன்னித்தருள்வாய்! உனக்கு வெற்றி உண்டாகட்டும்!

'All comprehensive' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல், எதையும் விட்டு விடாமல், செய்த குற்றத்துக்கு மட்டும் அல்லாது செய்யாத குற்றத்துக்குக்கூட மன்னிப்பு கேட்கும் இந்த ஸ்லோகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!








Meaning:
1: Whatever Sins have been Committed by Actions Performed by my Hands and Feet, Produced by my Speech and Body, Or my Works,
2: Produced by my Ears and Eyes, Or Sins Committed by my Mind (i.e. Thoughts),
3: While Performing Actions which are Prescribed (i.e. duties prescribed by tradition or allotted duties in one's station of life), As Well as All other Actions which are Not explicitly Prescribed (i.e. actions done by self-judgement, by mere habit, without much thinking, unknowingly etc); Please Forgive Them All,

4: Victory, Victory to You, O Sri Mahadeva Shambho, I Surrender to You, You are an Ocean of Compassion.

Tuesday, October 1, 2013

'கராரவிந்தேன பதாரவிந்தம்'


करारविन्देन पदारविन्दं
मुखारविन्दे विनिवेशयन्तम् ।
वटस्य पत्रस्य पुटे शयानं
बालं मुकुन्दं मनसा स्मारामि ॥१॥


அரவிந்தம்- தாமரை.

करारविन्देन - கையாகிய தாமரையால்
पदारविन्दं- பாதமாகிய தாமரையை
मुखारविन्दे- வாயாகிய தாமரையில்
विनिवेशयन्तम्- வைத்துக்கொண்டிருப்பவனை ।
वटस्य पत्रस्य पुटे शयानं-ஆல் இலையின் மேல் சயனித்திருப்பவனை
बालं मुकुन्दं  - குழந்தை முகுந்தனை
मनसा स्मारामि- மனதால் ஸ்மரிக்கிறேன். Kara-Aravindena

( இந்த ஸ்லோகத்திலும் இரண்டாம் வேற்றுமை உருபான 'ஐ' உபயோகிக்கப்பட்டுள்ளது)

உலகமெல்லாம் பிரளயத்தில் அழிந்த பின்னர் ஒரு சிறு குழந்தையாய், குஞ்சுக்கையால், குஞ்சுக்காலைப்பிடித்து, குஞ்சு வாயில் வைத்தவாறே ஆல் இலை மேல் படுத்துக்கொண்டு இருக்கும் குழந்தை முகுந்தனை வழிபடுவதாக அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.

'பால முகுந்தாஷ்டகம்' என்ற எட்டு ஸ்லோகங்களில் முதலாவதாகிய இந்த ஸ்லோகம் மிகவும் ப்ரபலம்.

இறைவனின் கைகளையும், கால்களையும், கண்களையும் தாமரையாக பாவிப்பது எல்லா காலங்களிலும் எல்லா மொழிகளிலும் இருந்திருக்கிறது.

துளஸிதாஸரின் 'श्री राम चन्द्र क्रुपालु' என்ற அழகான பாடலிலும் இதே போன்ற வர்ணனை வருகிறது.

'नव कंज लोचन  कंज मुख कर  कंज पद कंजारुणम |'  என்ற வரிகளில் ஸ்ரீ ராமனின் அழகு வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

कंज என்றால் தாமரை.

नव- புதிய कंज- தாமரை लोचन-கண்கள்
कंज தாமரை मुख- முகம்
कर- கைகள்  कंज தாமரை
पद- பாதங்கள் कंजारुणम- சிவந்த தாமரை

( அருணம் என்றால் சிவப்பு. சூரியனின் தேரோட்டிக்கு அருணன் என்று பெயர். ஏனென்றால் சூரியன் வருவதற்கு முன்பே வானம் சிவந்து விடும். தேரோட்டி தேருக்கு முன்னால் தானே அமர்ந்திருப்பான்.)


புதிய தாமரை போன்ற கண்களும், தாமரை போன்ற முகமும், தாமரை போன்ற கைகளும், சிவந்த தாமரை போன்ற பாதங்களும் பெற்று விளங்குபவன் ஸ்ரீராமன் என்று துளஸி தாஸர் உருகுகிறார். தொடர்ந்து வரும் வரிகளில் உள்ள வர்ணனை இன்னும் கூட அழகு.

Saturday, September 28, 2013

நமக்குத்தெரிந்த ஸ்லோகங்களுக்குப்பொருள் தெரிந்து கொள்வோம்!


நாம் தினந்தோறும் சொல்லும் ஸ்லோகங்கள் பலவற்றுக்கும் பெரும்பாலானவர்களுக்குப் பொருள் தெரிவதில்லை. இந்த ஸ்லோகங்களில் பக்தி வெளிப்படுவது உண்மை தான். அதையும் தாண்டி இலக்கிய அழகு வெளிப்படுகிறதே, அதையும் நாம் ஏன் சுவைத்து மகிழக்கூடாது?

என் சம்ஸ்க்ருத அறிவு சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. ஆனாலும் , தெரிந்ததைப் பிறருக்குச்சொல்ல வேண்டும் என்ற ஆசையால் இந்த முயற்சியைத் துவங்கி உள்ளேன்.

மிகவும் பிரபலமாக இருக்கும் ஸ்லோகங்களுக்கு முதலில் பொருள் கூறுகிறேன். அப்படியே தேவையான அளவு இலக்கண விளக்கங்களும் கொடுக்கிறேன்.

இந்த முயற்சி உங்களுக்குப்பிடித்திருந்தால், தெரியப்படுத்தவும். நான் எழுதுவதில் தவறுகள் இருந்தால், திருத்தவும்.

முதலில் பிள்ளையார் ஸ்துதி.

अगजानन पद्मार्कं  गजाननं अहर्निशं |
अनेकदं  तं भक्तानां एकदन्तं उपास्महे||

இதைப்பதம் பிரித்து எழுதினால் தான் விளங்கும்.

अग जा आनन पद्म अर्कं   गज आननं अहः निशम् |
अनेक दं  तं भक्तानां एकदन्तं उपास्महे||



अग - மலை. जा - மகள். आनन -முகம். पद्म- தாமரை. अर्कं - சூரியன். गज - யானை
आननं -முகத்தை உடையவனை. अहः -பகலிலும் निशम्- இரவிலும் . अनेक - பலவற்றை दं -கொடுப்பவனை तं - அவனை भक्तानां - பக்தர்களுக்கு एकदन्तं - ஒற்றைக்கொம்பு உடையவனை उपास्महे - நான் வணங்குகிறேன்|


மலையரசனின் மகளாகிய பார்வதியின் முகமாகிய தாமரையை மலரச்செய்யும் சூரியனை, யானை முகம் கொண்டவனை,  பக்தர்களுக்குப் பலவற்றைக்கொடுக்கும் அவனை, ஒற்றைக்கொம்பு உடையவனை,  நான் பகலிலும், இரவிலும் வணங்குகிறேன்.

இந்த ஸ்லோகத்தில் अगजानन/गजानन, अनेकदंतं/एकदन्तं என்ற சொற்கள் எதிர்ச்சொற்கள் போல் உபயோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், சொற்களைப்பிரித்துப் பொருள் கொள்ளும் போது அற்புதமான பொருள் விரிகிறது.

இங்கு ஸ்லோகம் முழுவதும் இரண்டாம் வேற்றுமை உருபு உபயோகப்பட்டுள்ளது.


Wednesday, August 7, 2013

என் ஆசிரியர்கள்


எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்து மகிழ்ந்த என் முதல் ஆசிரியர்என்னுடைய பெரியப்பாவின் மகனான ராமண்ணா வாத்தியார் தான்.எனக்கு நான்காம் வகுப்பு ஆசிரியராக அவர் இருந்தார்அவர்செய்யுட்களை உதாரணங்களோடு விளக்கிய விதம் எனக்கு இன்னும்நினைவில் இருக்கிறதுவகுப்பில் இருக்கும் மாணவர்களைக்கொண்டேகற்பனைக்கதைகள் சொல்லி ஒவ்வொரு செய்யுளையும் மறக்கமுடியாதபடி செய்து விடுவார். 'அழகு நிலா முழுமை நிலாமுளைத்ததுவிண் மேலேஅது பழமையிலே புது நினைவு பாய்ந்தெழுந்தார்போலே'என் பாரதிதாசனின் பாடலுக்கு அவர் சொல்லிக்கொடுத்து நடனம்ஆடியதும் நினைவுக்கு வருகிறது.
ஏதோவொரு நிகழ்ச்சிக்காக ஒரு சிறிய நாடகம் போட்டோம்அதற்குசிலப்பதிகாரத்தில் இருந்து ஆய்ச்சியர் குரவை என்னும் பகுதியில் இருந்து'வடவரையை மத்தாக்கிஎன் பாடலுக்கு நடனம் சொல்லிக்கொடுத்தார்.பல ஆண்டுகள் கழித்து எம்எஸ்சுப்புலட்சுமி பாடிய அந்தப்பாடலைநான் கேட்ட போது பழைய நினைவுகள் பொங்கிக்கொண்டு வந்தன.எங்கள் வேலூர் குக்கிராமம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரியநகரம் ஒன்றும் அல்லஅந்த கிராமத்தின் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் முயற்சியும் இலக்கிய ஆர்வமும் என்னை பிரமிக்க வைக்கின்றன.


நான் ஏழாம் வகுப்பு படித்த பொது சிவக்கொழுந்து வாத்தியார் எங்களுக்குத் தமிழ் செய்யுள் வகுப்புகள் எடுத்தார். அவர் நடத்திய சத்திமுற்றப்புலவர் எழுதிய 'நாரை விடு தூது' என் மனத்தில் அப்படியே பசுமையாக இருக்கிறது. ஒரு ஆசிரியர் எப்படி மாணவர்களை motivate செய்ய வேண்டும் என்று அவரிடம் கற்க வேண்டும். ஒரு சமயம் புலவர்கள் நிறைந்த ஒரு சபையில் ஒரு விவாதம் நடந்ததாம். மிகச்சிறந்த உவமானம் எது என்று விவாதித்த போது 'நாரை விடு தூது'வில் வரும் உவமை தான் மிகச்சிறந்தது என்று முடிவாயிற்றாம். அப்படி என்ன சிறப்பு அந்த உவமையில் என்று நாங்கள் கேட்டோம். இப்போது படிக்கப்போகிறோம். உங்களுக்குத் தெரிந்து விடும் ' என்றார் எங்கள் ஆசிரியர். அந்த வரிகளையும் முதலில் கூறினார்.'பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்! '.எங்களுக்கு முதலில் புரியவில்லை. 'பனங்கிழங்கு சாப்பிட்டிருக்கிறீர்களா? அதை முனையில் பிளந்து பாருங்கள். நாரையின் அலகு அதை அப்படியே ஒத்திருக்கும்' என்றார். கிராமத்து மாணவர்களான எங்களுக்கு உடனே புரிந்தது. அந்த உவமையையும் புலவர் எப்படி மெருகேற்றியிருக்கிறார்என்பதையும் அவர் விளக்கினார். அப்போதே தமிழில் ஒரு ஆர்வம் ஏற்பட்டு விட்டது.

பின்னர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு இலக்கியக்கூட்டம் நடந்தது. மணல் தரையில் நாங்கள் அமர்ந்திருக்க பேச்சாளர் தெ. ஞான சுந்தரம் 'பாரதி யார்?' என்ற தலைப்பில் பேசினார். அவர் அப்போது கண்டர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்தார். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பாரதியின் பன்முகச்சிறப்பினை உதாரணங்களுடன் அவர் விளக்கியதில் அன்றே பாரதிக்கு அடிமையானேன். சில மாதங்களுக்கு முன் இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் நடந்த போது அதே பேச்சாளர் இங்கே ஒரு நிகழ்ச்சிக்குத்தலைமை தாங்கி நடத்தினார். நிகழ்ச்சி முடிந்ததும் அவரைச்சென்றுபார்த்தேன். அவருடைய முதல் பேச்சைப்பற்றியும் குறிப்பிட்டேன். அவர் வேலூரில் இருந்த போது என் அப்பாவிடம் ஹிந்தி கற்றுக்கொண்டிருக்கிறார். என் தம்பி ஸ்ரீதரைப்பற்றி விசாரித்தார். மிகவும் மகிழ்சசியாக இருந்தது

அதே பள்ளியில் நான் பதினோராம் வகுப்பு படித்த் போது கண்டர் உயர்நிலைப்பள்ளியில் இருந்து சின்னு வாத்தியார் எங்களுக்கு தமிழ் இலக்கணம் நடத்தினார். 'தேமா', புளிமா' ,கருவிளம்' ,கூவிளம்' என்று அவர் அசை, சீர் முதலியவற்றை மிகத்தெளிவாக நடத்தினார். இன்னும் கூட எனக்கு நினைவிருக்கிறது.

பின்னர் அர்த்தநாரி வாத்தியார் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தார். துணைப்பாடம் தான் எடுத்தார். எளிய நடையில் சிறிய வாக்கியங்களைக் கொண்டு summary எழுதிப்போடுவார். பின்னர் எங்களை அப்படியே ஒப்பிக்கச் சொல்லுவார். இந்தக் காலத்தில் இந்த முறையை சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் எனக்கு ஆங்கிலத்தில் சொந்தமாக வாக்கியங்கள் அமைக்க வந்தது அப்போது தான். சிறிய வாக்கியங்களைக் கொண்டு எளிய நடையில் எழுதும் திறமையும் அப்படித்தான் வந்திருக்கவேண்டும்.

கல்லூரியில் படிக்கும் பொது மறக்க முடியாத ஆசிரியை Mrs. Elizabeth Antony. அவருடைய உச்சரிப்புக்கு நான் அடிமை. ஒவ்வொரு சொல்லிற்கும் உயிர் இருக்கிறது என்றுஉணர்த்துவதைப்போலத்தான் உச்சரிப்பார். அப்பொழுதெல்லாம் ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றாவது படிக்காமல் பட்டம் வாங்க முடியாது . நான் ஆங்கில இலக்கியம் எடுத்துப்படித்ததனால் இன்னும் அதிக நாடகங்களைப்படித்தேன்.
Antony and Cleopatra என்ற நாடகம் எல்லாருக்கும் பொது. அதை Mrs. Antony நடத்துவதை ஷேக்ஸ்பியர் கே ட்டிருக்கவேண்டும்.
அந்நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
என் வகுப்புக்கு ஷேக்ஸ்பியர் எடுத்தவர் வேறொரு ஆசிரியை. சுமாராக எடுப்பார். ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை படிப்பார். இரண்டாவது முறை படிப்பதை விளக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த வகுப்புக்கு Mrs. Antony தான் ஷேக்ஸ்பியர் எடுத்தார். அந்த மாணாக்கியர்கள் ஒவ்வொரு நாளும் வந்து ஆஹா! ஓஹோ! என்று அன்று எடுத்த பகுதியை விவரிக்கும் போது பொறாமையாக இருக்கும்.

இந்தப்பொறாமை உச்ச கட்டத்தை அடையும் படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அந்த நாடகத்தில் 'Enobarbaus' என்று ஒரு பாத்திரம். ஆண்டனியின் இணைபிரியாத தோழன்மற்றும் தொண்டன். ஆண்டனி மீது உயிரையே வைத்திருந்தான். கிளியோபாட்ரா இறந்து விட்டாள் என்ற பொய்யான செய்தியைக்கேள்விப்பட்டுத தன் உயிரை மாய்த்துக்கொள்ள நிச்சயிக்கிறான் ஆண்டனி. ஆனால் தன்னைத்தானே கொன்று கொள்ளும் அளவு அவனுக்குத்துணிவு வரவில்லை. ஆகவே தன் தொண்டன் Enobarbaus இடம் தன்னைக்கொன்று விடுமாறு கட்டளையிடுகிறான். தன் தலைவனை, உயிர் நண்பனை எப்படிக்கொல்வான் Enobarbaus ? 'நீங்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் என்னால் உங்களைக் கொல்ல முடியாது' என்கிறான். ஆண்டனி கண்ணை மூடிக்கொள்கிறான். '' என்று ஒரு சத்தம். கண்ணைத்திறந்தால் தன்னைத்தானே குத்திக்கொண்டு செத்துக்கிடக்கிறான் Enobarbaus.

இந்தக்காட்சியையும், ஆண்டனியின் சோகத்தையும், அவர்களுடைய நட்பின் ஆழத்தையும் Mrs. Antony எப்படி விவரித்திருப்பாரோ நான் அறியேன். ஹாஸ்டலில் அன்று மாலை டிபனுக்கு உருளைக்கிழங்கு போண்டா தயாரித்திருந்தார்கள். நான் குண்டாக ஆரம்பித்ததே சாரதா கல்லூரிஹாஸ்டல் உணவினால் தான். மிகவும் நன்றாக இருக்கும்.அதுவும் உருளைக்கிழங்கு போண்டா ரொம்பவே ஸ்பெஷல். ஒருவருக்கு இரண்டு தான். ஆனால் இரண்டுக்கு மேல் தின்ன முடியாது; அன்று நிறைய போண்டாக்கள் மீதமிருந்தன. வேண்டுமென்றால் இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். ஒரே ஆச்சரியம். எப்படி இவ்வளவு மீந்தது? என்று கேட்டால் இரண்டு மூன்று அறையிலிருந்து மாணவிகள் வரவே இல்லை என்றார்கள். அந்த அறைகளுக்குப்போய்ப்பார்த்தால் அறையைச்சார்த்திக்கொண்டு எல்லாரும் அழுது கொண்டிருக்கிறார்கள். ஏன் எல்லாரும் அழுகிறீர்கள்என்று கேட்டால், Enobarbaus செத்துப்போய் விட்டான்' என்று பதில் வருகிறது.
எனக்கும் அழுகை வந்தது. Enobarbaus செத்ததனால் அல்ல. என்வகுப்பில் Enobarbaus செத்து, ஆண்டனி செத்து கிளியோபாட்ராவும் செத்தாயிற்று. சிறு வருத்தம் கூட வரவில்லை. கதாநாயகனின் நண்பனின் சாவை நினைத்து நினைத்து உணவுக்குக்கூட போகாமல் அழும் அளவு பாதிப்பை ஏற்படுத்தும் படி பாடம் எடுக்கக் கூடிய ஆசிரியையிடம் பாடம் கேட்கும் பாக்கியம் எனக்குக்கிடைக்கவில்லையேஎன்று தான் அன்று அழுதேன்.
பின்னர் நானே தனியாக உட்கார்ந்து கொண்டு முழு நாடகத்தையும் படித்த போது அழுகை தன்னால் வந்தது.
எழுத்தாளன் தன் உணர்வுகளை எவ்வளவு தான் வேகத்துடன் வெளிப்படுத்தினாலும் அதை முழுமையாகப்புரிய வைப்பதில் ஆசிரியர்களின் பங்கு என் என்பதை அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்.

Monday, July 29, 2013

பெயரில் என்ன இல்லை?



'பெயரில் என்ன இருக்கிறது?' என்று எல்லாரும் சொல்கிறார்களே தவிர, யோசித்துப்பார்த்தால் பெயரில் தான் எல்லாமே இருக்கிறது. மனிதன் காடுகளில் வாழ்ந்தகாலத்தில் கூடத் தன்னைச்சுற்றி இருந்த பொருட்களுக்கும் விலங்குகளுக்கும் ஏதோ ஒரு குறியீடு இட்டு அழைத்து வந்திருக்கிறான். முதலில் உடல் மொழியாகவும் கைகளின் சங்கேதமாகவும் இருந்த மொழி மெல்ல மெல்லக் குரலின் உதவியாலும், நாக்கின் உபயோகத்தாலும் வார்த்தைகளின் கட்டமைப்பாக மாறியது. எந்த மொழியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தை பெயர்ச்சொல் தான். பெயர் இன்றி எதுவுமே இல்லை.

மனிதன் தன்னைச்சுற்றியுள்ள பொருட்களை 'இது தான் இது' என்று அறிந்து கொள்ளவும் தான் அறிந்ததை அதே போல் மற்றவரைப் புரிந்து கொள்ள வைக்கவும் முயன்றான். அந்த முயற்சியின் வெற்றியாகத்தான் பெயர் வந்தது.'பெயர்' என்பது ஒரு பொருளை 'இது தான் அது' என்று வரையறுக்கவும், 'இது வேறெதுவும் அல்ல' என்று உறுதிப்படுத்தவும் தேவையான ஒரு சொல்லாயிற்று.

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் வசதியானதும் உபயோகமானதும் இந்தப் பெயர் தான். மனிதர்கள் மட்டும் அல்லாது விலங்குகளும் பெயர் சொல்லி அழைத்தால் பதில் கொடுக்கின்றன. ஒரு புதியவனைக்கண்டவுடன் குரைத்துக்கொண்டே ஓடிப்போய் அவனது காலைக்கவ்வும் நாய் தன் எஜமான் 'டைகர்' என்று அழைத்தவுடன் புதியவனின் காலைவிட்டு விட்டுத் தன் எஜமானின் கையை நக்க ஓடுகிறது.

பெயர்கள் எப்போதுமே இன்பத்தைத்தருவதில்லை. ஒருவனை அவனுக்குப்பிடிக்காத ஒரு பெயரைச்சொல்லி அழைத்தால், அவனுக்குத்தாங்க முடியாத கோபம் வருகிறது. ஆனால்,அவனுக்குப் பிடித்தமான பெயரைச்சொல்லிக்கூப்பிட்டால், மிகவும் மகிழ்ந்து போகிறான்.

பெயர்களில், பிடித்தவை, பிடிக்காதவை, மரியாதையானவை, மரியாதையற்றவை, பதவியைக்குறிப்பவை என்று பல வகைகள் உண்டு. ஆச்சரியம் என்னவென்றால் சிலருக்கு அவரவருடைய பெயரைச்சொல்லி அழைத்தாலே மரியாதைக்குறைவு என்று தோன்றுகிறது. பட்டப்பெயர் சொல்வது தான் மரியாதை என்றாகிவிட்டது.

ஒருவனின் பெயரைக்கொண்டே அவனுடைய சமூகம், மதம் மற்றும் மொழியை ஓரளவு கண்டுபிடித்து விடலாம். இந்திய பெயர்களுக்கும் இந்தியரல்லாதவரின் பெயர்களுக்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவுக்குள்ளேயே, இந்து, முகமதிய, கிறிஸ்தவ மற்றும் பார்சி பெயர்களுக்குள் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

ஒருகுழந்தைக்குச்சூட்டப்படும் பெயர்கள் பெரும்பாலும் ஒரு பழைய மொழியில் இருந்து எடுக்கப்படுகின்றன. ஹீப்ரூவிலிருந்து 'பெஞ்சமின்', க்ரீக்கிலிருந்து 'ஆண்ட்ரூ', ஜெர்மனிலிருந்து 'ஆல்பெர்ட்' , இப்படி பல உதாரணங்கள் கொடுக்கலாம். ஆரம்பகாலத்தில் இப்பெயர்களுக்கெல்லாம் பொருள் அல்லது ஏதோ ஒரு நிகழ்ச்சியுடன் சம்பந்தம் இருந்தது.(டேவிட் என்றால் 'அன்புக்குரியவன்', சூசன் என்றால் 'லில்லி மலர்', மார்கரட் என்றால் 'முத்து').

இந்தியப்பெயர்கள் பலவாறான காரணங்களினால் வந்திருப்பினும் அவற்றில் மிகப்பெரிய அளவில் சம்ஸ்க்ருத மொழியின் பங்களிப்பு இருந்திருக்கிறது.இம்மொழி பெயர்களின் எல்லையற்ற சுரங்கமாகவே காணப்படுகிறது

ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாற்றப்படும் போது பெயர்கள் பல மாற்றங்களுக்குள்ளாகின்றன.உதாரணத்துக்கு 'ஹென்றி' என்ற பெயர் ( இதன் பொருள்-வீட்டுத்தலைவன்) ஹாரி, ஹால், என்ரிகோ, ஹென்ரிக் என்றெல்லாம் மாறியிருக்கிறது.இதே போல் ப்ரபலமான சம்ஸ்க்ருதப்பெயர்கள் நம்ப முடியாத மாறுதல்களுக்குட்பட்டிருக்கின்றன.
கஷ்மீரி மொழியில், ‘கோவிந்தா என்ற பெயர் 'கோண்டூ' என்றும், ‘ஷிவாஎன்ற பெயர், 'ஷெவு' என்றும், ‘ஹரி என்ற பெயர் 'ஹரு' என்றும் மாறியிருக்கின்றன. இதே போல்கங்கா என்ற பெயர்கங்குஜ்என்றும்,’லக்ஷ்மி என்ற பெயர்லக்கிம்என்றும்பவானி என்ற பெயர்போனிஎன்றும் மாறியுள்ளன.
நம் தமிழிலும் இப்படிப்பட்ட சுருக்கங்களுக்குப்பஞ்சமே இல்லை.'பஞ்சாபகேசன்'என்ற பெயர் 'பஞ்சு' ஆவதும், 'கிருஷ்ணமூர்த்தி''கிச்சு' அல்லது 'கிட்டு' ஆவதும்,'லக்ஷ்மி' 'லச்சி' ஆவதும் நமக்குத்தெரியாததா? ஆனால் இப்படி சுருக்கும் போது  இந்தப்பெயர்களுக்கு  நம்மை அறியாமல் நாம் செய்யும் தீங்கை நினைத்தால் திக்கென்றிருக்கிறது. 'ப்ரணதார்த்தி ஹரன்' என்ற பெயரைப் 'ப்ரணதார்த்தி' என்று அழைக்கிறார்கள். 'தன்னை வணங்கியவனுடைய துயரங்களை நீக்குபவன்' என்பது முழுப்பெயருக்கும் பொருள். இவர்கள் 'ப்ரணதார்த்தி' என்று அழைக்கும் போது 'தன்னை வணங்கியவனுடைய துயரம்' என்று அழைக்கிறார்கள். இந்தப் பொருள் புரிந்தால் அழைக்கப் படுபவருடைய மன நிலை எப்படி இருக்கும்? 'ரஜனீஷ்' அல்லது 'ரஜினி காந்த்' என்றால் 'இரவின் தலைவன்', அதாவது 'சந்திரன்' என்று பொருள்.  'ரஜினி' என்றால் 'இரவு' என்று பொருள். இது தெரியாமல் எத்தனை பேர் தம் குழந்தைகளுக்கு 'நிஷா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்! 'நிஷா' என்றாலும் 'இரவு' என்று தான் பொருள்.'நிஷாந்த்' என்றால் விடியற்காலை (இரவின் முடிவு). ஆனால் 'நிஷா' என்பது மிகவும் ப்ரபலமான ஒரு
பெயராக உள்ளது 

நம் முன்னோர்கள் மற்றும் உபநிஷதங்களின்
பெயர்கள் பல்வகைப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளுடன்
தொடர்பு உடையவைகளாகக் காணப்படுகின்றன.

'பரத்வாஜர்' என்ற பெயர் 'வானம்பாடியைக்குறிக்கும்.
'கௌசிகர்' என்ற பெயருக்கு 'ஆந்தை'என்று பொருள்.
'கஷ்யபரிஷியின் பெயர் 'கச்சப்' என்ற வார்த்தையில் இருந்து வந்தது. 'கச்சப்' என்றால் 'ஆமை'.
'மதங்க' முனிவருக்குப்பெயர் கொடுத்தது ஒரு யானை. 'மதங்க' என்றால் 'யானை'. பிள்ளையாருக்கு 'மாதங்க முகன்' என்று ஒரு பெயர் உண்டு.
'மாண்டூக்ய' உபநிஷதம் 'மண்டூக'த்தில் இருந்து வந்தது. 'மண்டூகம்' என்றால் 'தவளை'.
'தைத்ரீய உபநிஷதம் 'தித்ரி' என்ற பெயரில் இருந்து வந்தது. 'தித்ரி' என்றால் 'கௌதாரி'.
'நகுலன்' என்ற பெயருக்குக் கீரி என்று பொருள்.

இன்னும் பல் பெயர்கள் ஒரு காரணத்துக்காகவே வைக்கப்பட்டுள்ளன.

'துரோணர்' என்றால் 'கூடை' அல்லது 'பாத்திரம்'. தமிழில் கூட 'தொன்னை' என்றொரு சொல் உண்டு. 'துரோணர்' ஒரு கூடையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஆகவே அவர் பெயர் 'துரோணர்'.

'த்ருத ராஷ்ட்ரன்' என்றால் 'தேசத்தைத்தாங்குபவன்' என்று பொருள். தன் தேசத்தைத்தாங்கி அதைத் தன் மகனுக்குக்கொடுக்க அவன் என்ன பாடு பட்டான்!
ஆனால் பெரும்பாலான கௌரவர்களின் பெயர்கள் 'துர்' என்ற எழுத்தில் துவங்குகின்றன. 'துர்யோதனன்', 'துச்சாசனன்'.....என்று. இன்றும் கூடத் தன் மக்களுக்கு கௌரவர்களின் பெயரை யாரும் வைப்பதில்லை. மகாபாரதத்தை எழுதிய வேதவ்யாசருக்கே அவர்கள் நடத்தை பிடிக்காததால் அப்படி வைத்து விட்டாரோ?

தாத்தாவின் பெயர் கொண்டதால் தான் பேரனுக்கு அப்படி ஒரு பெயர். இப்போது தமிழர்களில் எத்தனை 'ராமச்சந்திரங்கள்' எத்தனை 'கிருஷ்ணமூர்த்திகள்', எத்தனை'சுப்ரமணியன்கள்'? இனி வரும் காலங்களில் அப்படி இருக்காது.இப்போதைய இளம் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு 'Internet'ல் தேடித் தான் பெயர் வைக்கிறார்கள். 'Nameology' என்ற ஒரு துறை இப்போது மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. பெயரை வைத்து ஜோசியம் சொல்கிறார்கள். அல்லது பெயரை மாற்றி நம் தலையெழுத்தை மாற்ற முடியும் என்கிறார்கள்.
'ரோமியோ அண்ட் ஜூலியட்' ல் 'What is there in a name? The rose by any other name will smell as sweet ' என்று ஜூலியட் கூறுகிறாள். ஆனால், இப்போதுள்ள ரோஜா கூடத் தன் பேரை மாற்றினால் கோபித்துக்கொண்டு தன் மணத்தைக்குறைத்துக்கொண்டு விடுமோ என்னவோ!


       (Prof. R.K. Koul  எழுதிய 'Sociology of Names' என்ற புத்தகத்தைப் படித்ததன் தாக்கம் தான் இந்தப்பதிவு. நிறைய செய்திகள் அத்தப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.)